சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை அறிவித்த தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில், வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. 

இந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டீன் எல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை சரியான இடத்தில் முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதல் போட்டி எல்கரின் சொந்த மண்ணான செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி அவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கேப் டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது எனத் தெரிவித்துள்ளது.

ஓய்வு முடிவு குறித்து டீன் எல்கர் கூறியதாவது: தென்னாப்பிரிக்க அணிக்காக 12 ஆண்டுகளாக விளையாட கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாக கருதுகிறேன். இத்தனை ஆண்டுகள் பயணம் சிறப்பானதாக அமைந்தது. அனைத்து சிறப்பான விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடர் எனது கடைசி சர்வதேசப் போட்டியாக இருக்கும். இந்த அழகான போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட் எனக்கு நிறைய விஷயங்களைக் கொடுத்துள்ளது. கேப் டவுனில் நடைபெறும் டெஸ்ட் போட்டியே எனது கடைசி போட்டி. கேப் டவுன் மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். என்னுடைய முதல் டெஸ்ட் ரன்கள் இந்த மைதானத்திலிருந்துதான் வந்தது. எனது கடைசி டெஸ்ட் ரன்களும் இந்த மைதானத்தில் இருந்துதான் வரப்போகிறது என்றார். 

தென்னாப்பிரிக்க அணிக்காக 84 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டீன் எல்கர் 5,146 ரன்கள் குவித்துள்ளார். அதில் 13 சதங்கள் மற்றும் 23 அரைசதங்கள் அடங்கும். 19 டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியை கேப்டனாக வழிநடத்தி அதில் 9 வெற்றிகளை எல்கர் பெற்றுத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com