‘கடைசி ஓவர்’ நாயகன் ஓய்வு அறிவிப்பு!

கடைசி ஓவரை நன்கு வீசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜொகிந்தர் சர்மா, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
படம் - twitter.com/MJoginderSharma
படம் - twitter.com/MJoginderSharma


2007 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கடைசி ஓவரை நன்கு வீசி இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தந்த ஜொகிந்தர் சர்மா, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

39 வயது ஜொகிந்தர் சர்மா இந்திய அணிக்காக 2004 முதல் 2007 வரை 4 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 77 முதல்தர ஆட்டங்களில் 5 சதங்களுடன் 2804 ரன்களும் 297 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் களத்தில் இருந்தார். கடைசி ஓவரை வீசிய ஜொகிந்தர் சர்மா, 3-வது பந்தில் மிஸ்பாவின் விக்கெட்டை எடுத்தார். அதனால் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. எனினும் அதுவே ஜொகிந்தர் சர்மா விளையாடிய கடைசி சர்வதேச ஆட்டமாகும். 

ஐபிஎல் போட்டியில் முதல் நான்கு வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்று 16 ஆட்டங்களில் விளையாடினார். 2011-ல் கார் விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சில காலம் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவில்லை. அதன்பிறகு 2012-13 உள்ளூர் போட்டிகளில் மீண்டும் விளையாடத் தொடங்கினார். 2022-ல் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்றார். 

இந்நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜொகிந்தர் சர்மா அறிவித்துள்ளார். கிரிக்கெட்டில் பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com