விதிமுறையை மீறியதற்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!

விதிமுறையை மீறியதற்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
விதிமுறையை மீறியதற்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி!
Published on
Updated on
2 min read

விதிமுறையை மீறியதற்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், வியாழன் அன்று தொடங்கியது. நாகபுரியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 139.3 ஓவர்களில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றது. ரோஹித் சர்மா. 120 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 70, அக்‌ஷர் படேல் 84 ரன்கள் எடுத்தார்கள். அறிமுக ஆஸி. வீரர் மர்ஃபி 7 விக்கெட்டுகள் எடுத்தார். 

அதிக ரன்கள் பின்தங்கியிருந்ததால் நெருக்கடியான சூழலில் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள் ஆஸி. பேட்டர்கள். ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 32.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது இந்திய அணி. 2-வது டெஸ்ட், தில்லியில் பிப்ரவரி 17 அன்று தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய இன்னிங்ஸின்போது ஜடேஜா பந்தைச் சேதப்படுத்தியதாக சர்ச்சை ஏற்பட்டது. சிராஜிடமிருந்த கிரீமை தன் இடக்கை சுட்டு விரலில் தேய்த்துக் கொண்டார் ஜடேஜா. இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனால் பந்தைச் சேதமாக்கி, அதன்மூலம் சாதகமான சூழலை உருவாக்கியதாக ஜடேஜா மீது பலரும் குற்றம் சுமத்தினார்கள். தனது விரலில் வலி நிவாரண மருந்தையே ஜடேஜா பயன்படுத்தியதாக இந்திய அணி தரப்பில் கூறப்பட்டது. இதுகுறித்து டெஸ்ட் ஆட்ட நடுவரும் இந்திய அணியினரிடம் விசாரணை நடத்தினார். வலி நிவாரண மருந்தைத் தனது விரலில் தேய்த்த ஜடேஜா, அதைக் கொண்டு பந்தைச் சேதப்படுத்தவில்லை என்பது காணொளி வழியாகத் தெரிய வந்தது.

எனினும் விதிமுறைகளின்படி கையில் ஏதாவது மருந்தைப் பயன்படுத்தும்போது கள நடுவர்களிடம் அனுமதி பெறவேண்டும். பந்தைச் சேதப்படுத்தப்படுத்தாமல் இருப்பதற்காக இந்த விதிமுறை அமலில் உள்ளது. ஆனால் நடுவர்களின் அனுமதியைப் பெறாமல் செய்த செயலுக்காக ஜடேஜா மீது நடவடிக்கை எடுத்துள்ளது ஐசிசி. அதன்படி ஜடேஜாவுக்கு ஓர் அபராதப் புள்ளியும் ஆட்ட ஊதியத்தில் 25% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. 24 மாத காலக்கட்டத்தில் ஜடேஜா முதல்முறையாக ஐசிசியின் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com