அஸ்வினுக்கு 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
அஸ்வினுக்கு 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், வியாழன் முதல் தொடங்கியது. நாகபுரியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லபுஷேன் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். சிராஜ், ஷமி தலா 1 விக்கெட்டை எடுத்தார்கள். 

இந்திய பேட்டர்கள் 2-வது நாளன்று பொறுப்புடன் விளையாடியதால் 2-வது நாள் முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது.  ரோஹித் சர்மா. 120 ரன்கள் எடுத்தார். ஜடேஜா 66, அக்‌ஷர் படேல் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 144 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்நிலையில் 3-ம் நாளன்றும் இந்திய அணி தொடர்ந்து ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 70 ரன்களில் மர்ஃபி பந்தில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ரசிகர்களைக் குஷிப்படுத்தினார் ஷமி. கடைசியாக வந்த சிராஜ், முடிந்தளவு அக்‌ஷர் படேலுக்குத் துணையாக நின்றார். 84 ரன்கள் எடுத்து அசத்திய அக்‌ஷர் படேல், கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 139.3 ஓவர்களில் 400 ரன்கள் எடுத்து 223 ரன்கள் முன்னிலை பெற்றது. அறிமுக ஆஸி. வீரர் மர்ஃபி 7 விக்கெட்டுகள் எடுத்தார். 

அதிக ரன்கள் பின்தங்கியிருந்ததால் நெருக்கடியான சூழலில் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொண்டார்கள் ஆஸி. பேட்டர்கள். அஸ்வின் தொடக்கத்திலிருந்து பந்துவீசி ஆஸி. அணியைக் கவிழ்த்தார். முதல் எட்டு விக்கெட்டுகளையும் சுழற்பந்துவீச்சாளர்கள் எடுத்தார்கள். கடகடவென விக்கெட்டுகளை எடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் அஸ்வின். கவாஜா, வார்னர், ரென்ஷா, ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி ஆகியோர் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார்கள். அஸ்வினுக்குக் கிடைத்த ஐந்து விக்கெட்டுகளில் நான்கு விக்கெட்டுகள் எல்பிடபிள்யூ மூலம் கிடைத்தன. இறுதியில், ஆஸ்திரேலிய அணி 32.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா, ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் அக்‌ஷர் படேல் 1 விக்கெட்டையும் எடுத்தார்கள். முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

2-வது டெஸ்ட், தில்லியில் பிப்ரவரி 17 அன்று தொடங்கவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com