சிஎஸ்கேவுக்குப் பின்னடைவா?: டெஸ்ட் தொடரிலிருந்து ஜேமிசன் திடீர் விலகல்!

ஐபிஎல் போட்டியில் முழு உடற்தகுதியுடன் சிஎஸ்கே அணிக்காக ஜேமிசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜேமிசன் (கோப்புப் படம்)
ஜேமிசன் (கோப்புப் படம்)


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமிசன் விலகியுள்ளார்.

ஜனவரி முதல் நியூசிலாந்தில் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த ஜேமிசன், தற்போது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தேர்வானார். இதுபற்றி நியூசிலாந்து தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறியதாவது: நல்ல உடற்தகுதியை அடைந்து தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார் ஜேமிசன். இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளார் என்று கூறினார். 

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ஜேமிசன் விலகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான இருநாள் பயிற்சி ஆட்டத்தில் ஜேமிசன் விளையாடினார். எனினும் முதுகில் மீண்டும் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் டெஸ்ட் தொடரிலிருந்து விலக நேர்ந்துள்ளது. 

சிடி ஸ்கேன் எடுத்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று நியூசிலாந்துப் பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் ஜேமிசனைத் தேர்வு செய்துள்ள சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனை ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (2021-ல் ஆர்சிபி அணி, ரூ. 15 கோடிக்கு ஜேமிசனைத் தேர்வு செய்தது.)

கடந்த வருடம் ஜூன் மாதம் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தின்போது ஜேமிசனுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. அன்று முதல் அவர் சர்வதேச ஆட்டங்கள் எதிலும் விளையாடவில்லை. இதனால் ஜேமிசனை ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்ய சிஎஸ்கேவைத் தவிர வேறு எந்த அணியும் ஆர்வம் செலுத்தவில்லை. 

காயத்திலிருந்து ஜேமிசன் மீண்டுவிட்டார், மீண்டும் விளையாட ஆர்வமாக உள்ளார் என்று பயிற்சியாளர் ஃபிளெமிங்கிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் தேர்வு செய்தோம் என்று ஜேமிசனின் தேர்வு குறித்து விளக்கம் அளித்தார் சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

ஐபிஎல் போட்டியில் முழு உடற்தகுதியுடன் சிஎஸ்கே அணிக்காக ஜேமிசன் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலையில் ஐபிஎல் போட்டியில் ஜேமிசன் விளையாடுவாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com