மந்தனாவுக்காக மோதிய அணிகள், ஆஸி. அணிக்கு ஜாக்பாட்: ஏலத்தின் முக்கிய அம்சங்கள்!

ஏலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது தில்லி அணி தான். 38 வீராங்கனைகளைத் தேர்வு செய்யப் போட்டியிட்டு...
மந்தனாவுக்காக மோதிய அணிகள், ஆஸி. அணிக்கு ஜாக்பாட்: ஏலத்தின் முக்கிய அம்சங்கள்!
Published on
Updated on
3 min read

டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

மும்பையில் நேற்று நடைபெற்ற டபிள்யூபிஎல் வீராங்கனைகளுக்கான ஏலத்தின் முக்கிய அம்சங்கள்:

* ஏலத்தில் 3 வீராங்கனைகள் (மந்தனா, கார்ட்னர், சிவர்-பிரண்ட்) ரூ. 3 கோடியைத் தொட்டார்கள். மொத்தமாக 7 பேர் ரூ. 2 கோடி இலக்கைத் தாண்டினார்கள். இந்திய வீராங்கனை மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது. 

* ஏலத்தில் 90 பேரைத் தேர்வு செய்யவேண்டும். 5 அணிகளும் சேர்ந்து 87 பேரைத் தேர்வு செய்தன. ரூ. 59.5 கோடி செலவிடப்பட்டன. 

* ஏலத்தில் 57 இந்திய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அமெரிக்க வீராங்கனை ஒருவரும் தேர்வாகியுள்ளார். 

* தில்லி, குஜராத், ஆர்சிபி ஆகிய அணிகள் தலா 18 பேரையும் மும்பை 17 பேரையும் லக்னெள 16 பேரையும் தேர்வு செய்துள்ளன.

* வீராங்கனைகளை அவர்களுடைய அடிப்படை விலையில் 12 பேரைத் தேர்வு செய்துள்ளது ஆர்சிபி. 

* ஏலத்தில் அதிகமுறை போட்டி ஏற்பட்டது மந்தனாவுக்குத்தான். மும்பையும் ஆர்சிபியும் சேர்ந்து 28 முறை மந்தனாவைத் தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்தன. கடைசியில் ரூ. 3.40 கோடிக்கு மந்தனாவைத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. 

* அதேபோல ஏலத்தில் அடிப்படை விலையை விடவும் அதிக மடங்கு சம்பளம் பெற்றது, மந்தனா தான். அடிப்படை விலையை விடவும் 6.8 மடங்கு அதிகத் தொகைக்கு அவர் தேர்வாகியுள்ளார். 

* எந்த வீராங்கனையும் தேர்வு செய்ய 5 அணிகளும் முட்டி மோதவில்லை. ஆனால் ஹர்மன்ப்ரீத் கெளர், தீப்தி சர்மா, பெத் மூனி, காப், தஹிலா மெக்ராத் ஆகியோரைத் தேர்வு செய்ய 4 அணிகள் முயன்றன. 

* வெளிநாட்டு வீராங்கனைகளுக்கென்று உள்ள 30 இடங்களில் 14 இடங்களை ஆஸி. வீராங்கனைகள் பெற்றுள்ளார்கள். (அடுத்ததாக இங்கிலாந்து வீராங்கனைகள் - 7 பேர்). அதேபோல மொத்தத் தொகையில் ரூ. 14.25 கோடியை ஆஸி. வீராங்கனைகள் தட்டிச் சென்றுள்ளார்கள். 

* அசோசியேட் அணிகளில் இருந்து ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த தாரா நோரிஸை தில்லி அணி தேர்வு செய்துள்ளது. 

* சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய 57 பேரை ரூ. 54.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளன 5 அணிகளும். 30 உள்ளூர் வீராங்கனைகளை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளன. வெளிநாட்டு வீராங்கனைகளில் சர்வதேச ஆட்டத்தில் இன்னும் அறிமுகமாகாத ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லாரா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார். உள்ளூர் வீராங்கனைகளில் இந்தியாவைச் சேர்ந்த தனுஜா கன்வார் அதிக தொகைக்குத் தேர்வாகியுள்ளார். அவரை ரூ. 50 லட்சத்துக்கு குஜராத் தேர்வு செய்துள்ளது. 

* 5 அணிகளில் ஏலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது தில்லி அணி தான். 38 வீராங்கனைகளைத் தேர்வு செய்யப் போட்டியிட்டுக் கடைசியில் 18 பேரைத் தேர்வு செய்தது. 

* ஏலத்தில் தேர்வான வயதான வீராங்கனை, இந்தியாவைச் சேர்ந்த ஜசியா அக்தர். வயது 34. அதேபோல 15 வயது சோனம் யாதவ், ஷப்னம் ஷகில் ஆகியோரும் ஏலத்தில் தேர்வாகியுள்ளார்கள். 

* ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு வீராங்கனைகளை மட்டுமே அணிகள் தேர்வு செய்துள்ளன.  தமிழ்நாடு சார்பாக 9 வீராங்கனைகள் பங்கேற்றார்கள். மூத்த வீராங்கனை திருஷ் காமினி, நிரஞ்சனா நாகராஜன், அபர்ணா மொண்டல், கீர்த்தனா பாலகிருஷ்ணன், ஆர்ஷி செளத்ரி, நேத்ரா ஐயர், எம்.எஸ். ஐஸ்வர்யா, அனுஷா சுந்தரேசன், ரம்யாஸ்ரீ பிரசாத் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்திருந்த 9 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்றதில் அபர்ணா மட்டுமே தேர்வாகியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான டி. ஹேமலதாவும் ஏலத்தில் தேர்வாகியுள்ளார். ஹேமலதா, இந்திய அணிக்காக 9 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஹேமலாதாவை குஜராத் அணி ரூ. 30 லட்சத்துக்கும் அபர்ணாவை தில்லி அணி ரூ. 10 லட்சத்துக்கும் தேர்வு செய்துள்ளன.  உள்ளூர் போட்டிகளில் ரயில்வே அணிக்காக ஹேமலதாவும் தமிழக அணிக்காக அபர்ணாவும் விளையாடி வருகிறார்கள். அபர்ணா, கடந்த வருடம் வரை பெங்கால் அணிக்காக விளையாடி வந்தார்.

* ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான முதல் 10 வீராங்கனைகள்

1. மந்தனா (ஆர்சிபி) - ரூ. 3.4 கோடி
2. ஆஷ்லி கார்ட்னர் (குஜராத்) - ரூ. 3.2 கோடி
3. நாட் சிவர்-பிரண்ட் (மும்பை) - ரூ. 3.2 கோடி
4. தீப்தி சர்மா (லக்னெள) - ரூ. 2.6 கோடி
5. ஜெமிமா (தில்லி) - ரூ. 2.2 கோடி
6. பெத் மூனி (குஜராத்) - ரூ. 2 கோடி
7. ஷஃபாலி வர்மா (தில்லி) - ரூ. 2 கோடி
8. பூஜா வஸ்த்ரகர் (மும்பை) - ரூ. 1.9 கோடி
9. ரிச்சா கோஷ் (ஆர்சிபி) - ரூ. 1.9 கோடி
10. சோஃபி எக்லஸ்டோன் (லக்னெள) - ரூ. 1.8 கோடி
ஹர்மன்ப்ரீத் கெளர் (மும்பை) - ரூ. 1.8 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.