ஆர்சிபி அணியுடன் இணைந்த சானியா மிர்சா!

இந்த மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார்.
ஆர்சிபி அணியுடன் இணைந்த சானியா மிர்சா!

டபிள்யூபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா.

டபிள்யூபிஎல் போட்டியில் வீராங்கனைகளுக்கான ஏலம் மும்பையில் திங்கள் அன்று நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். டபிள்யூபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டபிள்யூபிஎல் போட்டியில் ஆமதாபாத், மும்பை, பெங்களூரு, தில்லி, லக்னெள ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

ஏலத்தில் பிரபல வீராங்கனைகளான மந்தனாவை ரூ. 3.40 கோடிக்கும் ரிச்சா கோஷை ரூ. 1.90 கோடிக்கும் தேர்வு செய்துள்ளது ஆர்சிபி அணி. எல்லீஸ் பெர்ரி, மேகன் ஷுட், சோபி டிவைன் போன்ற வீராங்கனைகளும் அந்த அணியில் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆலோசகராகப் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி சானியா மிர்சா கூறியதாவது:

இந்த வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டபோது நான் ஆச்சர்யமடைந்தேன். விளையாட்டை முதல் விருப்பமாகத் தேர்வு செய்யலாம், எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் விளையாட்டில் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கைகளை அடுத்தத் தலைமுறை வீராங்கனைகளிடம் ஏற்படுத்துவேன் என்றார். 

இந்த மாதத்துடன் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சானியா மிர்சா சமீபத்தில் அறிவித்தார். ஆறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் 35 வயது சானியா மிர்சா. இரட்டையர் பிரிவில் உலகளவில் நெ.1 வீராங்கனையாகவும் இருந்துள்ளார். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை. 2021-ல் இரட்டையர் ஆட்டத்தில் 43-வது பட்டம் வென்றார். பிப்ரவரி 19 முதல் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடிவிட்டு டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com