
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் குறைவான ஓவர்களை வீசியுள்ளதாக முன்னாள் வீரர் ஆலன் பார்டர் கூறியுள்ளார்.
இந்தியாவில் 4 டெஸ்டுகளில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி, அடுத்ததாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது டெஸ்ட், இந்தூரில் மார்ச் 1 அன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது. இதன் மூலம் 4 ஆட்டங்கள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் இரண்டில் வெற்றி பெற்ற இந்தியா, கோப்பையைத் தக்கவைத்துள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தனக்கான இடத்தை ஏறத்தாழ உறுதி செய்துள்ளது.
தில்லி டெஸ்டில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடி வந்த ஆஸ்திரேலியா, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பகுதியிலேயே 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பேட்டிங் வரிசையை, இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா முற்றிலுமாகச் சிதைத்தார். அவருக்கு அஸ்வினும் துணை நிற்க, சுழலியே சுருண்டது ஆஸ்திரேலியா. பின்னர் 114 ரன்களை நோக்கி பேட்டிங் செய்த இந்தியா, 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 10 விக்கெட்டுகள் சாய்த்த ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார்.
2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி விளையாடியது பற்றி முன்னாள் வீரர் ஆலன் பார்டர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
வேகப்பந்து வீச்சாளர் என்றாலே ஆபத்தானவர் தான். தில்லி டெஸ்டில் பேட் கம்மின்ஸ் குறைவான ஓவர்களையே வீசியுள்ளார். முதல் இன்னிங்ஸில் கம்மின்ஸ் பந்துவீசுவதற்கான தேவை இருந்தது. இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுத்தபோதும் அருமையான கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஒரு சில ஓவர்களை அவர் வீசியிருந்தால் பேட்டர்களுக்கும் அதன் பாதிப்பு தெரிந்திருக்கும். ஆடுகளத்தில் மற்ற வீரர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கம்மின்ஸிடம் சென்று, நீங்கள் ஏன் பந்துவீசக் கூடாது எனக் கேட்டிருக்க வேண்டும். ஒரு கேப்டனாக முதல்முறையாகத் தேர்வை எதிர்கொண்டுள்ளார் கம்மின்ஸ். மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டதால் தான் பந்துவீச வேண்டும் என்பதை அவர் மறந்து விட்டார் என நினைக்கிறேன். ஓர் அணியின் முக்கியப் பந்துவீச்சாளர் கேப்டனாக மாறினால் இப்படித்தான் நடக்கும் என்றார்.
2-வது டெஸ்டில் கம்மின்ஸ் முதல் இன்னிங்ஸில் 13 ஓவர்கள் வீசினார். 2-வது இன்னிங்ஸில் ஒரு ஓவரும் வீசவில்லை.
தடுமாறும் ஆஸி. பேட்டர்களுக்கு உதவத் தயார்: பிரபல வீரர் அறிவிப்பு
பிசிசிஐ, ஐபிஎல்-லில் பதவிகள் வேண்டாம்: கே.எல். ராகுல் ஆதரவு ட்வீட்டில் பதறிய முன்னாள் வீரர்!
செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்: தொடரும் தமிழகத்தின் ஆதிக்கம்!
இந்தியாவுக்கு இன்னொரு செஸ் கிராண்ட்மாஸ்டரைப் பரிசளித்துள்ள தமிழ்நாடு!
டெஸ்ட் தொடர்: டேவிட் வார்னர் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.