மகளிர் டி-20 உலகக்கோப்பை: 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
மகளிர் டி-20 உலகக்கோப்பை: 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி!


மகளிர் டி-20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி போராடி தோல்வியைத் தழுவியது.  5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அரையிறுதி ஆட்டம் கேப்டவுனில் இன்று (பிப். 23) நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. 

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

ஹேலி, மூனி ஆகியோர் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். இந்திய வீராங்கனை ராதா யாதவின் பந்து வீச்சில் 25 ரன்களுக்கு ஹேலி ஆட்டமிழந்தார். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லன்னிங்குடன் கூட்டு சேர்ந்த மூனி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மூனி 37 பந்துகளில் அரைசதம் கடந்து 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து கிராட்னர் களமிறங்கினார். 

இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சால், லன்னிங் அரை சதம் எடுக்காமல் 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிராட்னர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், அடுத்தடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேர்த்தது. 

இந்திய வீராங்கனைகளின் ஆட்டம்

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கிய ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தடுமாற்றத்துடனே ஆட்டத்தைத் தொடங்கினர். 

ஸ்மிருதி 2 ரன்களுக்கும், ஷஃபாலி 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து வந்த யாஷிகா - ஜெமிமா ஓரளவு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

யாஷிகா (4) சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் ஹர்மன் பிரீத் கெளர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 34 பந்துகளில் அரை சதம் கடந்து 52 ரன்களுக்கு ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். 

எனினும் மறு முனையில் நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடிய ஜெமிமா 24 பந்துகளில் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் (14), தீப்தி ஷர்மா (20), ரானே (11). ஷிகிதா பாண்டே (1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

முடிவில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com