பொறுப்புகள் உள்ளன: ரிஷப் பந்துக்கு கபில் தேவ் அறிவுரை

உங்களால் ஒரு ஓட்டுநரை வைத்துக்கொள்ள முடியும். தனியாகக் கார் ஓட்டிச் செல்ல வேண்டியதில்லை.
பொறுப்புகள் உள்ளன: ரிஷப் பந்துக்கு கபில் தேவ் அறிவுரை

கார் பயணத்தில் ஓட்டுநரைத் துணைக்கு வைத்திருக்கலாம் என ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் கபில் தேவ் அறிவுரை கூறியுள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து ரிஷப் பந்த் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா். டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரிஷப் பந்த் விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் ஒரு பேட்டியில் கூறியதாவது:

இது ஒரு பாடம். நான் வளரும் கிரிக்கெட் வீரராக இருந்தபோது பைக்கில் எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அன்று முதல் பைக்கைத் தொடவே என் சகோதரர் என்னை அனுமதிக்கவில்லை. ரிஷப் பந்த் நலமாக உள்ளார் என்பதை அறியும்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

வேகமாக ஓடும் அமர்க்களமான கார் உங்களிடம் இருக்கலாம். ஆனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களால் ஒரு ஓட்டுநரை வைத்துக்கொள்ள முடியும். தனியாகக் கார் ஓட்டிச் செல்ல வேண்டியதில்லை. கார் ஓட்டுவது குறித்த ஆர்வத்தை நான் அறிகிறேன். இந்த வயதில் இது இயல்பு தான். அதேசமயம் உங்களுக்கென்று பொறுப்புகள் உள்ளன. உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

கடந்த வெள்ளியன்று கார் விபத்தை நேரில் பாா்த்த அரசு பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் ரிஷப் பந்தை மீட்டு ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. விபத்தைத் தொடா்ந்து ரிஷப் பந்தின் தாயாரிடம் பேசிய உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சிகிச்சை செலவை மாநில அரசு முழுமையாக ஏற்கும் என்றாா். பந்துக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

படுகாயங்களுடன் தப்பியுள்ள ரிஷப் பந்துக்கு மருத்துவ சிகிச்சையும், ஓய்வும் தேவை என்பதால் இந்தாண்டின் முதல் பாதியில் அவா் மீண்டும் விளையாட வாய்ப்புகள் மிக குறைவு எனப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டி, பிப்ரவரியில் தொடங்கும் இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் போன்றவற்றில் ரிஷப் விளையாட மாட்டாா் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com