சர்ச்சைக்குரிய கேட்ச்: குழப்பத்துக்கு எம்சிசி விளக்கம்!

இதுபோன்ற கேட்சுகள் குறித்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
யூடியூப் ஸ்க்ரீன் ஷாட் (Sony LIV)
யூடியூப் ஸ்க்ரீன் ஷாட் (Sony LIV)

பிபிஎல் போட்டியில் சர்ச்சைக்குரிய விதத்தில் எல்லைக்கோட்டுக்கு அருகே கேட்ச் பிடித்த மைக்கேல் நாசரின் செயல் குறித்து எம்சிசி விளக்கம் அளித்துள்ளது.

பிபிஎல் டி20 போட்டியில் ஜனவரி 1 அன்று பிரிஸ்பேன் ஹீட் - சிட்னி சிக்ஸர்ஸ் அணிகளில் பிரிஸ்பேனில் மோதின. முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தன. அடுத்து பேட்டிங் செய்த சிட்னி சிக்ஸர்ஸ் 20 ஓவர்களில் 209 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த ஆட்டத்தில் சிட்னி அணியின் ஜார்டன் சில்க் கேட்சை மைக்கேல் நாசர் பிடித்தது சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. லாங் ஆஃப் பகுதியில் சில்க் அளித்த ஷாட்டை எல்லைக்கோட்டின் அருகே பிடிக்க முயன்றார் மைக்கேல் நாசர். ஆனால் தடுமாறி விழ  நேர்ந்ததால் பந்தைத் தூக்கி எல்லைக்கோட்டின் வெளியே எறிந்தார். வெளியே பந்தை கேட்ச் பிடித்தால் எப்படி அவுட் ஆகும்? எனவே பந்தை எகிறியபடி பிடித்து உள்ளே வீசினார். பிறகு கோட்டுக்கு உள்ளே வந்து பந்தைப் பிடித்து அசத்தினார். இதை முதலில் பார்த்தவர்களுக்கு இது எப்படி அவுட் ஆகும்? பந்தும் ஃபீல்டரும் எல்லைக்கோட்டு வெளியே சென்றுவிட்டார்கள் தானே என்று குழம்பினார்கள். 

ஆனால் நாசர் புத்திசாலித்தனமாகச் செய்தது, கோட்டுக்கு வெளியே சென்றாலும் கால் தரையில் படாமல் பந்தைப் பிடித்து உள்ளே தள்ளினார். இதனால் கேட்சுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு பேட்டர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இதுபோன்ற கேட்சுகள் குறித்த விதிமுறைகளில் மாற்றம் தேவை என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஃபீல்டரும் பந்தும் கோட்டுக்கு வெளியே இருப்பதால் இதை சிக்ஸர் என அறிவித்திருக்க வேண்டும் என்கிற மாற்றுக்கருத்துகளும் வெளியாகியுள்ளன. 

இதுகுறித்த சர்ச்சைக்கு எம்சிசி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. ட்விட்டரில் கூறியதாவது:

1. பந்தை முதலில் பிடிக்கும்போது கோட்டுக்கு உள்ளே இருக்க வேண்டும்.
2. கோட்டுக்கு வெளியே ஒரே சமயத்தில் தரையில் காலை வைத்தபடி பந்தைத் தொடக்கூடாது. 

இவ்வாறு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com