கடைசி விக்கெட்டுக்கு 104 ரன்கள்: பாகிஸ்தானை வெறுப்பேற்றிய நியூசி. ஜோடி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் நெ.10., நெ.11 பேட்டர்களின் கூட்டணி சேர்த்த 4-வது அதிகபட்ச ரன்கள் இது.
அரை சதமெடுத்த ஹென்றி
அரை சதமெடுத்த ஹென்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 449 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி விக்கெட்டுக்கு மேட் ஹென்றி - அஜாஸ் படேல் ஜோடி 104 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளது. 

முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கராச்சியில் நேற்று தொடங்கியது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லேதம் 71, டெவோன் கான்வே 122 ரன்கள் எடுத்தார்கள்.

இன்று மூன்று விக்கெட்டுகளை விரைவாக எடுத்தது பாகிஸ்தான் அணி. இதனால் நியூசிலாந்து அணி, 345 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேட் ஹென்றி - அஜாஸ் படேல் நம்பமுடியாத விதத்தில் பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்கள். பாகிஸ்தான் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டதோடு விரைவாகவும் ரன்கள் எடுத்தார்கள். ஹென்றி களமிறங்கியவுடன் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்ததால் அஜாஸ் படேலும் தெம்புடன் விளையாடினார். உணவு இடைவேளையின்போது இருவரும் 88 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணியை வெறுப்பேற்றியிருந்தார்கள். 42 பந்துகளில் அரை சதமெடுத்தார் ஹென்றி. 

உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தக் கூட்டணி 100 ரன்களைக் கடந்தது. கடைசியில் அஜாஸ் படேல் 35 ரன்கள் எடுத்து அப்ரார் பந்தில் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 104 ரன்கள் சேர்த்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் நெ.10., நெ.11 பேட்டர்களின் கூட்டணி சேர்த்த 4-வது அதிகபட்ச ரன்கள் இது. 81 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ஹென்றி. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 131 ஓவர்களில் 449 ரன்கள் எடுத்துள்ளது. அப்ரார் 4 விக்கெட்டுகளையும் நசீம் ஷா, சல்மான் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com