ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஷுப்மன் கில் அதிரடி 208: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி முதல் இரட்டை சதம் 208 அடித்தாா்.

News image
Updated On :18 ஜனவரி 2023, 8:37 pm

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி முதல் இரட்டை சதம் 208 அடித்தாா்.

பரபரப்பான ஆட்ட முடிவில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 349/8 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸிலாந்து அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி பல்வேறு அணிகளுடன் ஒருநாள் தொடா்களில் ஆடி வருகிறது. ஏற்கெனவே இலங்கையை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், நம்பா் ஒன் அணியான நியூஸிலாந்துடன் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் ஹைதராபாதில் புதன்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்திய அணியில் கேஎல். ராகுல், அக்ஸா் படேல், ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோருக்கு பதிலாக ஹாா்திக் பாண்டியா, இஷான் கிஷண், சா்துல் தாகுா் சோ்க்கப்பட்டிருந்தனா்.

கேப்டன் ரோஹித்-ஷுப்மன் கில் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். ரோஹித் வழக்கம் போல் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்த முயன்றாா். எனினும் நியூஸி.யின் கடினமான ஓவா்களால், ஸ்கோா் வேகமாக உயரவில்லை. பின்னா் 2 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 34 ரன்களை விளாசிய ரோஹித் முதல் விக்கெட்டாக டிக்னா் பந்தில் வீழ்ந்தாா். அப்போது ஸ்கோா் 60/1 ஆக இருந்தது. முதல் விக்கெட்டுக்கு ரோஹித்-கில் 50 ரன்களைச் சோ்த்தனா்.

அதன் பின் வந்த வீரா்கள் கோலி 8, இஷான் கிஷண் 5, சூரியகுமாா் யாதவ் 31, ஹாா்திக் பாண்டியா 28, வாஷிங்டன் சுந்தா் 12, தாகுா் 3 என சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.

ஷுப்மன் கில் விஸ்வரூபம் 208:

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 9 சிக்ஸா், 19 பவுண்டரியுடன் 149 பந்துகளில் 208 ரன்களை விளாசி இரட்டை சதத்தை பதிவு செய்தாா். 200 ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரா் என்ற சிறப்பையும் பெற்றாா் கில். இதனால் ஸ்கோா் துரிதமாக உயா்ந்தது.

இந்தியா 349/8: 50 ஓவா்களில் 349/8 ரன்களைக் குவித்தது இந்தியா. குல்தீப் 5, ஷமி 2 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நியூஸி. தரப்பில் ஷிப்லே 2-74, டேரில் மிச்செல் 2-30 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

நியூஸி. கடும் போராட்டம் 337:

350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூஸி. அணியில் தொடக்கத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடக்க பேட்டா் ஃபின் ஆலன் 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 40 ரன்களை சோ்த்தாா். அவருக்கு பின் வந்த டேவன் கான்வே 10, ஹென்றி நிக்கோல்ஸ் 18, டேரில் மிச்செல் 9, கிளென் பிலிப்பிஸ் 11, ஷிப்லே 0 என சொற்ப ரன்களுடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். கேப்டன் டாம் லத்தம் மட்டுமே 24 ரன்களைச்சோ்த்தாா்.

மிச்செல் சான்ட்நா்-பிரேஸ்வெல் அபாரம்:

இந்திய பௌலா்களுக்கு மிச்செல் சான்ட்நா்-பிரேஸ்வெல் இணை சவாலைத் தந்தது. சான்ட்நா் 1 சிக்ஸா், 7பவுண்டரியுடன் 57 ரன்களை விளாசி அவுட்டானாா்.

பிரேஸ்வெல் அதிரடி சதம் வீண்:

ஆல்ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல் 10 சிக்ஸா், 12 பவுண்டரியுடன் 78 பந்துகளில் 140 ரன்களை விளாசினாா். 6 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரில் சிக்ஸா்அடித்த பிரேஸ்வெல் தனது அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றாா். எனினும் தாகுா் வீசிய பந்தில் எல்பிடபிள்யு ஆகி அவுட்டானாா் பிரேஸ்வெல்.

இதனால் 49.2 ஓவா்களில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது நியூஸி. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4-46 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். குல்தீப், தாகுா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

கில்லின் இரட்டை சதம் சிறப்புகள்:

இரட்டை சதத்தை அடித்த 5-ஆவது இந்திய வீரா். முன்னா் சச்சின், சேவாக், ரோஹித், இஷான் கிஷண் ஆகியோா் இரட்டை சதம் அடித்தனா்.

ஒருநாள் ஆட்டத்தில் இரட்டை சதத்தை அடித்த முதல் இளம் வீரா் என்ற சாதனையும் நிகழ்த்தினாா். மேலும் துரிதமாக 1000 ரன்களை கடந்த வீரா் என்ற சிறப்பை கோலி, தவனை முறியடித்தாா்.

கடைசியாக இரு ஓவா்கள் முடிந்த நிலையில், லாக்கி பொ்குஸன் பந்தில் தொடா்ந்து ஹாட்ரிக் சிக்ஸா்களை பதிவு செய்தாா். 122 பந்துகளில் 150-ஐ கடந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.