சொந்த மண்ணில் இந்தியாவின் அரிதான தோல்வி: இந்தூர் டெஸ்ட் புள்ளிவிவரங்கள்!

2012-க்குப் பிறகு சொந்த மண்ணில் டாஸ் வென்ற டெஸ்டில் தோல்வியை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி.
சொந்த மண்ணில் இந்தியாவின் அரிதான தோல்வி: இந்தூர் டெஸ்ட் புள்ளிவிவரங்கள்!

2012-க்குப் பிறகு சொந்த மண்ணில் டாஸ் வென்ற டெஸ்டில் தோல்வியை எதிர்கொண்டுள்ளது இந்திய அணி.

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தூரில் நடைபெற்ற டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷமிக்குப் பதிலாக ஷுப்மன் கில், உமேஷ் யாதவ் ஆகியோரும் ஆஸி. அணியில் கம்மின்ஸ், வார்னருக்குப் பதிலாக மிட்செல் ஸ்டார்க், கிரீன் ஆகியோரும் இடம்பெற்றார்கள். 3-வது நாளில் ஆஸ்திரேலிய அணி, 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்து அபார வெற்றியை அடைந்தது. ஹெட் 49, லபுஷேன் 28 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த டெஸ்டில் மொத்தமாக 11 விக்கெட்டுகள் எடுத்த லயன், ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என இந்தியா முன்னிலை வகிக்கிறது. 

சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்டுகளில் இந்திய அணி தோற்பது அரிதாகவே உள்ளது. அதன் அடிப்படையில் இந்தூரில் மகத்தான சாதனையை நிகழ்த்தியுள்ளது ஆஸி. அணி.

1135 பந்துகள் - இந்தூர் டெஸ்டில் வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கை. இந்தியாவில் நடைபெற்ற முழுமையான டெஸ்டுகளில் குறைந்த எண்ணிக்கையில் வீசப்பட்ட பந்துகளில் இதற்கு 4-வது இடம்.

இந்திய அணி டாஸில் வென்று டெஸ்டில் கடைசியாகத் தோற்றது, 2012-ல், இங்கிலாந்துக்கு எதிராக. அதற்குப் பிறகு, இந்தூர் டெஸ்டுக்கு முன்பு வரை சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்டுகளில் 22 முறை டாஸ் வென்ற இந்திய அணி, 19-ல் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளை டிரா செய்துள்ளது. 

இதற்கு முன்பு, இந்தியாவில் டாஸில் தோற்று ஆஸ்திரேலியா கடைசியாக டெஸ்டை வென்றது, 1998-ல், பெங்களூரில். அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் வென்ற 4 டெஸ்டுகளிலும் டாஸிலும் வென்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com