
ஒரு வருடத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்த 4-வது இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் இளம் வீரர் ஷுப்மன் கில்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3-வது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. 4-வது டெஸ்ட் ஆமதாபாத்தில் வியாழன் அன்று தொடங்கியது.
மிகவும் கவனமாக விளையாடிய ஷுப்மன் கில், 194 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இது அவருடைய 2-வது டெஸ்ட் சதம். டெஸ்டில் இரு சதங்களும் டி20யில் 1 சதமும் ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களும் எடுத்துள்ளார் ஷுப்மன் கில்.
2023 ஷுப்மன் கில் அமோகமாக உள்ளது.
டெஸ்டில் தற்போது சதமடித்துள்ள ஷுப்மன் கில், ஒருநாள், டி20யிலும் இந்த வருடம் சதம் அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஜனவரி 15 அன்று இலங்கைக்கு எதிராக 116 ரன்களும் ஜனவரி 18, ஜனவரி 24 அன்று நியூசிலாந்துக்கு எதிராக முறையே 208 ரன்களும் 112 ரன்களும் என 10 நாள்களில் 3 ஒருநாள் சதங்கள் அடித்தார்.
பிப்ரவரி 1 அன்று நியூசிலாந்துக்கு எதிரான டி20யில் 126* ரன்கள் எடுத்தார். தற்போது டெஸ்ட் சதம்.
ஜனவரி 15 முதல் மார்ச் 11 வரை சர்வதேச கிரிக்கெட்டில் 5 சதங்கள் எடுத்துள்ளார் ஷுப்மன் கில்.
மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒரு வருடத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதமடித்த 10-வது வீரர், 4-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்துள்ளார் ஷுப்மன் கில். ஆச்சர்யமாக, இந்தச் சாதனை விராட் கோலிக்குக் கூட இதுவரை அமைந்ததில்லை. கடந்த வருடம் தான் முதல்முதலாக டி20யில் சதமடித்தார் கோலி. கடந்த வருடம் ஒரு நாள் சதமும் எடுத்தார். ஆனால் டெஸ்ட் சதம் அடிக்கும் வாய்ப்பு கோலிக்குக் கிடைக்கவில்லை.
ஒரு வருடத்தில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்
சுரேஷ் ரெய்னா - 2010
கே.எல். ராகுல் - 2016
ரோஹித் சர்மா - 2017
ஷுப்மன் கில் - 2023
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.