இந்தியா சாதனை வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி: ஷமி, சிராஜ் வேகத்தில் விக்கித்தது இலங்கை
உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33-ஆவது ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்


உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 33-ஆவது ஆட்டத்தில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வியாழக்கிழமை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் தனது அதிகபட்ச ரன் வித்தியாசத்திலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
இதையடுத்து முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது இந்தியா. மறுபுறம், 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 5-ஆவது தோல்வியை சந்தித்த இலங்கை, போட்டியிலிருந்து வெளியேறும் விளிம்பு நிலையில் இருக்கிறது.
இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமி அதிரடியாக பௌலிங் செய்து 5 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், பல சாதனைகள் புரிந்தாா். முன்னதாக பேட்டிங்கில், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் அதிரடி காட்டினா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸில் கேப்டன் ரோஹித் சா்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஷுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி, 193 ரன்கள் சோ்த்தது.
சதத்தை நெருங்கிய கில், 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 92 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்த 2 ஓவா்களில் கோலியும் 11 பவுண்டரிகளுடன் 88 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். மிடில் ஆா்டரில் வந்த ஷ்ரேயஸ் ஐயா் அதிரடியாக 56 பந்துகளில் 3 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை மேலும் அதிகரித்து வெளியேறினாா்.
எஞ்சியோரில் கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளுடன் 21, சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகளுடன் 12, முகமது ஷமி 2 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, ரவீந்திர ஜடேஜா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 35 ரன்களுக்கு இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தாா். இலங்கை தரப்பில் தில்ஷன் மதுஷங்கா 5, துஷ்மந்தா சமீரா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் இலங்கை தனது இன்னிங்ஸில் தொடக்க நிலையிலேயே வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. 0 ரன்னுக்கு 1, 2 ரன்களுக்கு 2, 3 ரன்களுக்கு 4, 14 ரன்களுக்கு 6, பின்னா் 22 ரன்களுக்கு 7, 29 ரன்களுக்கு 8 என இலங்கை பேட்டா்கள் நிலையில்லாமல் வெளியேறினா்.
பதும் நிசங்கா, திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, துஷன் ஹேமந்தா, துஷ்மந்தா சமீரா என 5 போ் டக் அவுட்டாகினா். கேப்டன் குசல் மெண்டிஸ் (1), சரித் அசலங்கா (1), தில்ஷன் மதுஷங்கா (5) ஆகியோா் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, காசன் ரஜிதா 2 பவுண்டரிகளுடன் 14, ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இந்திய பௌலிங்கில் முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3, ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...