பாகிஸ்தானின் வெற்றியால் சுவாரஸ்யமாக மாறிய உலகக் கோப்பை; அரையிறுதிக்கு தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
பாகிஸ்தானின் வெற்றியால் சுவாரஸ்யமாக மாறிய உலகக் கோப்பை; அரையிறுதிக்கு தகுதி பெற்ற தென்னாப்பிரிக்கா!

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுகளை இழந்து 401 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா 108 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் கேன் வில்லியம்சன் அதிகபட்சமாக 95 ரன்கள் எடுத்தார். 

இதனையடுத்து, 402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா சஃபீக் மற்றும் ஃபகர் சமான் களமிறங்கினர். அப்துல்லா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின், கேப்டன் பாபர் அசாம் மற்றும் ஃபகர் சமான் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. இடையிடையே மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டு மீண்டும் தொடங்கப்பட்டது. ஃபகர் சமான் மைதானத்தில் சிக்ஸர் மழையைப் பொழிந்தார். அதிரடியாக விளையாடிய அவர் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் கடந்தார். 

25.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு  200 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் விளையாடி கொண்டிருக்கையில் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. ஃபகர் சமான் 81 பந்துகளில் 126 ரன்கள் (8 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்) எடுத்தும், பாபர் அசாம் 63 பந்துகளில் 66 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்) எடுத்தும் களத்தில் இருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் டக்வொர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. தங்களது அரையிறுதிக்கான வாய்ப்பையும் பாகிஸ்தான் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இந்தத் தோல்வி புள்ளிப்பட்டியலில் நல்ல நிலையில் இருந்த நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து ரன் ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்தின் இன்றைய தோல்வியினால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

ஏற்கனவே, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கான இரண்டு அணிகள் உறுதியான நிலையில், மீதமுள்ள 2 இடங்களைப் பிடிக்க மற்ற அணிகளுக்குள் கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com