அரையிறுதி! இந்தியாவின் திட்டம் என்ன?

இதுவரையான உலகக்கோப்பைப் போட்டி தொடர்களில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி அதிக வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது.
அரையிறுதி! இந்தியாவின் திட்டம் என்ன?

கடந்த அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் தொடங்கிய ஒருநாள் உலகக் கோப்பை போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

10 அணிகள் பங்கேற்ற இதில் 45 லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து, இந்தியா- நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதியில் விளையாட உள்ளன.

மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்திய-நியூஸி அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தான் ஆடிய 9 லீக் ஆட்டங்களிலும் வென்று முதலிடத்துடன் தகுதி பெற்றுள்ளது. அதே நேரம் நியூஸிலாந்து முதலிடத்தில் இருந்த நிலையில், தொடா்ச்சியாக தோல்வி கண்டு நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டு பின்னா் அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்நிலையில், பலம் பொருந்திய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற கடுமையாக போராடுவார்கள் என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் 117 போட்டிகளில் மோதியுள்ளன. அதில், இந்தியா 59 வெற்றியையும் நியூஸி. 50 வெற்றியை பதிவு செய்துள்ளன. ஒரு ஆட்டம் டையாகவும், 7 ஆட்டங்கள் முடிவில்லாமலும் ஆயின.

கிட்டத்தட்ட நியூசி. சம பலத்துடன் இருந்தாலும் இன்றைய போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கவே வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு உகந்தது என்பதால் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணிக்கு மைதானம் சாதகமாக அமையும் என்பதே கருத்தாக இருக்கிறது.

குறிப்பாக, அதிக ரன்களைக் குவிப்பதற்கு ஏதுவான மைதானமாக இது கருதப்படுவதால் ரோகித் சர்மா, விராத் கோலி ஆகியோரின் பேட்டிங் கடந்த ஆட்டங்களில் சிறப்பாக இருந்ததால் இந்தியாவுக்கு சாதமாகவே இன்றைய போட்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதேநேரம், பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கமும் உதவிகரமாக இருக்கும் என்பதால் ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்றோரின் பங்களிப்பும் ஆட்டத்தின் திசையை மாற்றக்கூடியதாகவே இருக்கும். முக்கியமாக, இந்த ஆட்டத்தில் இந்திய அணி தமிழக வீரர் அஸ்வினை அணியில் சேர்த்து 6 பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும் திட்டத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணியில் ஒரு போட்டியில் கூட அஸ்வின் களமிறங்கவில்லை. அதனால், முக்கியமான இந்த ஆட்டத்தில் அஸ்வின் சேர்க்கப்படலாம். 

மேலும், இந்திய அணி டாஸில் வெற்றி பெற்றால் பேட்டிங்கை தேர்வு செய்யவே வாய்ப்பு அதிகம். காரணம், இரண்டாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கும் அணி, பனிகாரணமாக பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்படலாம் என்பதால் டாஸ் வெல்லும் அணியே முதலில் களமிறங்க முடிவு செய்வார்கள்.

நியூசி. அணியின் ரச்சின் ரவிந்திரா, டெவன் கான்வே, கேன் வில்லியம்சன் உள்ளிட்டோரின் பேட்டிங்கும் ஆட்டத்தை மாற்றக்கூடியவை. இதனால், இன்றைய போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மிக கவனமாகவே இரு அணி வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.!

பயிற்சியில் நியூசி. வீரர்கள்.
பயிற்சியில் நியூசி. வீரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com