அரையிறுதிப் போட்டி தோல்விக்குப் பின் டேரில் மிட்செல் கூறியது என்ன?

இந்தியாவின் இந்த ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆச்சர்யமளிக்கவில்லை எனவும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் எனவும் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.
அரையிறுதிப் போட்டி தோல்விக்குப் பின் டேரில் மிட்செல் கூறியது என்ன?

இந்தியாவின் இந்த ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆச்சர்யமளிக்கவில்லை எனவும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் எனவும் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதிப்  போட்டியில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில்  சிறப்பாக விளையாடிய  ரோஹித் சர்மா ( 47 ரன்கள்), ஷுப்மன் கில் (80 ரன்கள்), விராட் கோலி (117 ரன்கள்), ஸ்ரேயஸ் ஐயர் (105 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (39 ரன்கள்) எடுத்து அசத்தினர்.

இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டேரில் மிட்செல் அதிகபட்சமாக 134 ரன்கள் எடுத்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் இந்த ஆக்ரோஷமான கிரிக்கெட் ஆச்சர்யமளிக்கவில்லை எனவும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் எனவும் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த உலகக் கோப்பை முழுவதும் எங்களது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்திய அணியின் அச்சுறுத்தலை சமாளிக்க எங்களிடம் திட்டம் இருந்தது. ஆனால், இறுதியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசமாக்கினார்கள். இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாதது ஏமாற்றமளிக்கிறது. ஆட்டத்தின் பாதிக்குப் பிறகு பனிப்பொழிவு இருக்கும், 10 ஓவர்கள் மீதம் வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்தோம். ஆனால், இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு எங்களது வெற்றியைத் தடுத்துவிட்டார்கள். பேட்டிங்கின்போதும் கிட்டத்தட்ட 400 ரன்கள் குவித்தனர். பந்துவீச்சிலும் இந்திய அணி அபாரமாக செயல்பட்டது. முகமது ஷமி உள்பட இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com