டி20 உலகக் கோப்பைக்கு கடும் போட்டியாளராக இந்திய அணி: ரவி சாஸ்திரி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைக்கு கடும் போட்டியாளராக இந்திய அணி: ரவி சாஸ்திரி

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பைத் தொடர் அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.  50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி அண்மையில் முடிவடைந்த நிலையில், குறுகிய கால இடைவெளியில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளுடன் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது. 

இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்குமென இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: எதுவும் எளிதில் கிடைத்துவிடாது. இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒரு உலகக் கோப்பையை வெல்ல 6 உலகக் கோப்பைகளாக காத்திருக்க வேண்டியிருந்தது. உலகக் கோப்பையை எளிதில் வென்றுவிட முடியாது. உலகக் கோப்பையை வெல்ல இறுதிப்போட்டி நடைபெறும் நாள் சிறப்பானதாக அமைய வேண்டும். இறுதிப்போட்டிக்கு முன்னதாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இறுதிப்போட்டியிலும் அதனை செயல்படுத்த வேண்டும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி ஆகிய இரண்டு நாள்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

அந்த இரண்டு நாள்கள் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நீங்கள்தான் வெற்றியாளர். அந்த இரண்டு நாள்களிலும் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டதால் கோப்பையை வென்றனர். இந்தியாவின் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும், தோல்வியை நினைத்து முடங்கிவிடாமல் வீரர்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி கடும் போட்டியாளராக இருக்கும். நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் வலிமையான அணியாக இருந்தும், கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றமளிக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com