டி20 போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்த ருதுராஜ் கெய்க்வாட்; ஆஸி.க்கு 223 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அண
டி20 போட்டியில் முதல் சதத்தைப் பதிவு செய்த ருதுராஜ் கெய்க்வாட்; ஆஸி.க்கு 223 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3-வது போட்டி குவாஹாட்டியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ்  வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்தியா முதலில் பேட் செய்தது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய இஷான் கிஷன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இந்த நிலையில், ருதுராஜ் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தனர்.

இந்த இணை சிறப்பாக விளையாடியது. குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். டி20 போட்டிகளில் இது அவருடைய முதல் சதமாகும். திலக் வர்மா அவரது பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டினார். மேக்ஸ்வெல் வீசிய இறுதி ஓவரில் கெய்க்வாட் சிக்ஸர் மழைப் பொழிந்தார். அந்த ஓவரில் மட்டும் இந்திய அணிக்கு 30 ரன்கள் கிடைத்தன.  

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது. கெய்க்வாட் 57 பந்துகளில் 123 ரன்களுடனும் (13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள்), திலக் வர்மா 24 பந்துகளில் 31 ரன்களுடனும் (4 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் கேன் ரிச்சர்ட்சன், ஆரோன் ஹார்டி மற்றும் ஜேசன் பெஹெரண்டிரஃப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com