அசைக்க முடியாத கே.எல்.ராகுல், விராட் கோலி பார்ட்னர்ஷிப்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

அழுத்தமான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 
அசைக்க முடியாத கே.எல்.ராகுல், விராட் கோலி பார்ட்னர்ஷிப்: ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா!

அழுத்தமான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அசைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் அதிகபட்சமாக 46 ரன்களும், டேவிட் வார்னர் 41 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின், ஹார்திக் பாண்டியா மற்றும் முகமது சிராஜ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. இந்திய அணிக்கு தொடக்கம்  மிக மோசமானதாக அமைந்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 0 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இந்த அழுத்தமான சூழலில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல்  பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் வர இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி 116 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும். 

அதன்பின், ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். ஆட்டத்தினை அடுத்த கியருக்கு மாற்றி அதிரடியில் இறங்கினார் கே.எல்.ராகுல். மேக்ஸ்வெல் வீசிய 41-வது ஓவரில் தொடர்ச்சியாக சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து அணியின் வெற்றிக்குத் தேவையான ரன்களைக் குறைத்தார். 

இறுதியில், 41.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி. ஹார்திக் பாண்டியா சிக்ஸர் விளாசி வெற்றி இலக்கை அடையச் செய்தார். கே.எல்.ராகுல் 97  ரன்களுடனும் , ஹார்திக் பாண்டியா 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஸ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 

சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை தொடர் பயணத்தை இந்தியா வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com