இந்தியா அபார பந்துவீச்சு: 191 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழப்பு!

இந்திய அணியின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா அபார பந்துவீச்சு: 191 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழப்பு!

இந்திய அணியின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (அக்டோபர் 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா சஃபீக் மற்றும் இமாம் உல் ஹக் களமிறங்கினர். இந்த இணை பாகிஸ்தானுக்கு சீரான தொடக்கத்தைத் தந்தது. இருப்பினும், அப்துல்லா 20 ரன்களிலும், இமாம் உல் ஹக் 36 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. நிதானமாக விளையாடிய பாபர் அசாம் அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் 58 பந்துகளில் 50  ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் போல்டானார்.

அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சௌத் ஷகீல் (6 ரன்கள்), இப்திகார் அகமது (4 ரன்கள்), ஷதாப் கான் (2 ரன்கள்), முகமது நவாஸ் (4 ரன்கள்), ஹாசன் அலி (12 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக விளையாடிய ரிஸ்வான் 49 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இறுதியில் 42.5 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி  இந்திய அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com