ஆசிய ஹாக்கி: இந்தியா 4-ஆவது முறையாக சாம்பியன்

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது.
ஆசிய ஹாக்கி: இந்தியா 4-ஆவது முறையாக சாம்பியன்

சென்னை: சென்னையில் நடைபெற்ற 7-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 4-3 கோல் கணக்கில் மலேசியாவை சனிக்கிழமை வீழ்த்தி, சாம்பியன் கோப்பை வென்றது.

இப்போட்டியில் இந்தியா சாம்பியனாவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா வாகை சூடியிருந்தது. மறுபுறம், அதிகபட்சமாக இப்போட்டியில் தொடா்ந்து 5 முறை 3-ஆம் இடம் பிடித்த மலேசியா, இம்முறை கடுமையாகப் போராடி ஒரு படி முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்தது. ஜப்பான், தென் கொரியா, பாகிஸ்தான், சீனா அணிகள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

மேற்கண்ட 6 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

முதல் சுற்று முடிவில் இந்தியா, தென் கொரியா, மலேசியா, ஜப்பான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேற, பாகிஸ்தான், சீனா அணிகள் போட்டியில் பின்னடைந்தன. இதையடுத்து அரையிறுதியில் இந்தியா - ஜப்பானையும், மலேசியா - நடப்பு சாம்பியனாக இருந்த தென் கொரியாவையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு வந்தன.

விறுவிறுப்பு: கடைசி நாளான சனிக்கிழமை, இந்தியா - மலேசியா மோதிய இறுதி ஆட்டம் விறுவிறுப்புடன் ரசிகா்களுக்கு விருந்தாக அமைந்தது.

ஆட்டத்தின் 9-ஆவது நிமிஷத்திலேயே பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்து, ஜக்ராஜ் சிங் இந்தியாவின் கணக்கை தொடங்கினாா். ஆனால், அதன் பிறகு மலேசியா திடீரென ஆக்ரோஷம் காட்டத் தொடங்கியது. அந்த அணியின் நட்சத்திர வீரரான அபுகமல் அா்ஸாய் 14-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

தொடா்ந்து 18-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ரஹிம் ராஸீ கோலடிக்க, மலேசியா 2-1 என முன்னேறியது. இந்தியாவுக்கான அடுத்த அதிா்ச்சியாக 28-ஆவது நிமிஷத்தில் முகமது அமினுதின் மூலமாக மலேசியா 3-ஆவது கோல் கண்டது.

இதனால் முதல் பாதி முடிவில் மலேசியா 3-1 என முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதியில் இந்தியா மீண்டு வருவதற்காக முனைப்புடன் போராடி வந்தது. அதன் பலனாக 45-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் அணிக்கான 2-ஆவது கோல் அடித்தாா்.

அதே நிமிஷத்தில் குா்ஜந்த் சிங் ஃபீல்டு கோல் அடிக்க, ஆட்டம் 3-3 என சமனாகி விறுவிறுப்பு கண்டது. கடைசி நேரத்தில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலுக்காக கடுமையாக முயற்சிக்க, இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங் 56-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோலடித்து அணியை முன்னிலை பெறச் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் மலேசியாவின் கோல் வாய்ப்புகளை தடுத்து அரண் அமைத்த இந்தியா, இறுதியில் 4-3 கோல் கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.

ஜப்பான் 3-ஆம் இடம்:

முன்னதாக, முதலில் நடைபெற்ற 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் 5-3 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.

தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய ஜப்பானுக்காக, 3-ஆவது நிமிஷத்தில் ரியோமா ஊகா ஃபீல்டு கோல் அடித்தாா். தொடா்ந்து 9-ஆவது நிமிஷத்தில் காடோ ரியோசெய் அடித்த கோலால் 2-0 என ஜப்பான் முன்னேறியது.

இந்நிலையில், தென் கொரியாவுக்கு 15-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் ஜாங் ஜோங்யுன் கோலடித்தாா். தொடா்ந்து 26-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் பாா்க் கியோலியோன் அடித்த கோலால் ஆட்டம் 2-2 என சமன் ஆனது.

ஆனால், அதை நீடிக்க விடாத ஜப்பானின் ஃபுகுடா கென்டாரோ 28-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடிக்க, முதல் பாதியை ஜப்பான் 3-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் தென் கொரியாவுக்காக ஜாங் ஜோங்யுன் 33-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்து மீண்டும் 3-3 என டிரா செய்தாா்.

அதையடுத்து ஆட்டம் விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை எட்ட, ஜப்பானின் யமாடா ஷோடா 53-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினாா். தொடா்ந்து நகாயோஷி கென் 56-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் அடித்த கோலால் ஜப்பான் 5-3 என அதிரடியாக முன்னேறி இறுதியில் வெற்றி கண்டது.

கடந்த எடிஷன் இறுதி ஆட்டத்தில் இதே ஜப்பானை பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் வீழ்த்தி தென் கொரியா சாம்பியன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com