மீண்டும் இடக்கையால் பேட்டிங்: மூன்று பவுண்டரிகள் அடித்த விஹாரி!

16 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, ஒரு கையால் பேட்டிங் செய்து 3 பவுண்டரிகளை அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.
விஹாரி (கோப்புப் படம்)
விஹாரி (கோப்புப் படம்)

கையில் எலும்புமுறிவு ஏற்பட்டபோதும் இடக்கையால் ஒருமுறை அல்ல, இருமுறை பேட்டிங் செய்து அனைவருடைய பாராட்டுகளையும் மீண்டும் பெற்றுள்ளார் விஹாரி. 

இந்தூரில் ஆந்திரா - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 127.1 ஓவர்களில் 379 ரன்கள் எடுத்தது. ரிக்கி புய் 149 ரன்களும் கரண் ஷிண்டே 110 ரன்களும் எடுத்தார்கள். கேப்டன் விஹாரி 27 ரன்கள் எடுத்தார்.

முதல் நாளன்று விஹாரி பேட்டிங் செய்தபோது அவேஷ் கானின் பவுன்சர் பந்தால் அவருடைய இடக்கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனால் 16 ரன்களில் இருந்தபோது காயம் காரணமாக ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. 2-வது நாளன்று அவர் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தபோது அனைவரும் ஆச்சர்யப்படும் விதத்தில் இடக்கை பேட்டராக மாறியிருந்தார். இடக்கை மணிக்கட்டில் மேலும் காயம் ஏற்படாமல் தடுப்பதற்காக இப்படி விளையாடினார். 

முதல் நாளன்று 16 ரன்களில் காயமடைந்து ஓய்வறைக்குத் திரும்பினார் விஹாரி. ஸ்கேன் செய்து பார்த்ததில் இடக்கை மணிக்கட்டில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தது உறுதியானது. இதனால் 5, 6 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த ஆட்டத்தில் தேவைப்பட்டால் விஹாரி விளையாடட்டும் என அணி நிர்வாகம் முடிவெடுத்தது. 

ஆனால் முதல் இன்னிங்ஸில் 328/4 என்கிற நிலையில் இருந்த ஆந்திர அணி, 353/9 எனத் தடுமாறியபோது பேட்டிங் செய்ய களமிறங்கினார் விஹாரி. அணியின் நலனுக்காக வழக்கத்துக்கு மாறாக இடக்கையில் பேட்டிங் செய்தார். வழக்கமான வலக்கை பேட்டராக விளையாடினால் இடக்கை மணிக்கட்டில் மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் இடக்கை பேட்டராக விளையாட முடிவெடுத்தார். எனினும் மீண்டும் பேட்டிங் செய்தபோது வலக்கையைத்தான் பெரிதும் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட ஒரு கையால் பேட்டிங் செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். தைரியமாக அவேஷ் கானின் ஓவரை மீண்டும் எதிர்கொண்டார். சில பவுண்டரிகளும் அடித்துக் கடைசியில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் விஹாரின் துணிச்சலான நடவடிக்கையால் 379 ரன்கள் எடுத்தது.

விஹாரின் இந்தச் செயலுக்குச் சமூகவலைத்தளங்களில் அதிக பாராட்டுகள் கிடைத்தன. பிரபல வீரர்களும் விஹாரியைப் பாராட்டினார்கள்.

இந்நிலையில் இதே செயலை மீண்டும் ஒருமுறை செய்துள்ளார் விஹாரி. மத்தியப் பிரதேசத்தை முதல் இன்னிங்ஸில் 228 ரன்களுக்குக் கட்டுப்படுத்தி முன்னிலை பெற்றது ஆந்திர அணி. ஆனால் 2-வது இன்னிங்ஸில் மோசமாக பேட்டிங் செய்ததால் 76 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. அதுவரை பேட்டிங் செய்ய வராத விஹாரி, அணியின் நலனுக்காக மீண்டுமொரு முறை இடக்கையால் பேட்டிங் செய்ய முன்வந்தார். பிருத்வி ராஜுடன் இணைந்து விளையாடி தன் பங்குக்கு எப்படியோ கஷ்டப்பட்டு 15 ரன்கள் எடுத்து கடைசியில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். 16 பந்துகளை எதிர்கொண்ட விஹாரி, ஒரு கையால் பேட்டிங் செய்து 3 பவுண்டரிகளை அடித்து ஆச்சர்யப்படுத்தினார். ஆந்திர அணி, 32.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com