அவருக்கான கதவுகள் திறந்தே உள்ளன: பிரபல வீரருக்காகக் காத்திருக்கும் கிரிக்கெட் அணி!

அவருடைய சூழலை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே அவருடன் பேசி அதற்கேற்ற முடிவுகளை எடுப்போம்...
அவருக்கான கதவுகள் திறந்தே உள்ளன: பிரபல வீரருக்காகக் காத்திருக்கும் கிரிக்கெட் அணி!

வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்டுக்கான கதவுகள் எப்போதும் திறந்திருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பிரபல வீரர்களான டிரெண்ட் போல்ட், கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம், மார்டின் கப்தில் ஆகிய நால்வரும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளார்கள்.  டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக கிராண்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

33 வயது டிரெண்ட் போல்ட், நியூசிலாந்து அணிக்காக 78 டெஸ்டுகள், 93 ஒருநாள், 44 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பணிச்சுமை, குடும்பத்தினருடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் போன்ற காரணங்களால் தன்னை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ளுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்தார். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டு அவரை விடுவித்தது. இந்த முடிவால் டி20 லீக் போட்டிகளில் டிரெண்ட் போல்டின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடினார். 2023 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கூறியதாவது: ஒருநாள் 2019 உலகக் கோப்பை இறுதிச்சுற்று முடிந்த பிறகு கேன் வில்லியம்சனிடம் நான் சொன்னேன், அடுத்த நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இதே இறுதிப் போட்டியில் மீண்டும் விளையாடுவோம் என்று. உலகக் கோப்பையை வெல்ல நாங்கள் மீண்டும் முயல்வோம் என்றார்.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பைப் போட்டி பற்றி நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக்குழுத் தலைவர் கெவின் லார்சன் கூறியதாவது:

டிரெண்ட் போல்டுக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. தலைமைப் பயிற்சியாளர் கேரி ஸ்டட்டுடன் தொடர்ந்து போல்ட் பேசி வருகிறார். போல்ட்டின் திறமை, அவருடைய பங்களிப்பு பற்றி அனைவரும் அறிவோம். நியூசிலாந்து அணியில் போல்ட் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அவருடைய சூழலை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே அவருடன் பேசி அதற்கேற்ற முடிவுகளை எடுப்போம். இந்த வருடம் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி உள்ளது. நட்சத்திரங்கள் ஒன்றானால் எங்களுக்காகத் தொடக்க ஓவர்களை போல்ட் வீசுவார் என நம்பிக்கையுடன் உள்ளேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com