ஷங்கர் படத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்!

தலைமைச் செயல் அதிகாரியாக என்னை நியமித்தால், ஓரிரு மாதங்களில் எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுவேன்.
ஷங்கர் படத்தைக் குறிப்பிட்டுப் பேசிய பிரபல கிரிக்கெட் வீரர்!

வங்கதேச ப்ரீமியர் லீக் (பிபிஎல்) போட்டியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார் பிரபல வீரர் ஷகிப் அல் ஹசன்.

35 வயது ஷகிப் அல் ஹசன், வங்கதேச அணிக்காக 2006 முதல் 65 டெஸ்டுகள், 224 ஒருநாள், 109 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

9-வது பிபிஎல் போட்டி ஜனவரி 6 முதல் தொடங்குகிறது. 7 அணிகள் 46 ஆட்டங்களில் விளையாடுகின்றன. பிப்ரவரி 16 அன்று இறுதிச்சுற்று நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய பிபிஎல் மற்றும் இந்த வருடம் முதல் தொடங்கும் ஐஎல்டி20, எஸ்ஏ டி20 போட்டிகளால் பிபிஎல் 2023 போட்டியில் பிரபல வீரர்கள் பலரும் கலந்துகொள்ளவில்லை. எனினும் பாபர் ஆஸம், முஹமது ரிஸ்வான், ஷஹீன் ஷா அஃப்ரிடி, டேவிட் மலான், சிகந்தர் ராஸா போன்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

இந்நிலையில் பிபிஎல் போட்டி பற்றி பிரபல வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசன் கூறியதாவது:

பிபிஎல் போட்டியின் தலைமைச் செயல் அதிகாரியாக என்னை நியமித்தால், ஓரிரு மாதங்களில் எல்லாக் குறைகளையும் சரிசெய்து விடுவேன். நாயக் (தமிழில் வெளியான முதல்வன் படத்தின் ஹிந்தி ரீமேக்) படத்தைப் பார்த்தீர்களா? நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் ஒரு நாளில் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் ஏலத்தை நடத்தி, பிபிஎல் போட்டியை இதர போட்டிகள் நடைபெறாத காலக்கட்டத்தில் ஆரம்பிப்பேன். எல்லாத் தொழில்நுட்பங்களும் கொண்டுவரப்படும். தொலைக்காட்சி ஒளிபரப்பில் தரம் இருக்கும். உள்ளூர், வெளியூர் என்கிற விதத்தில் போட்டிகள் நடைபெறும். 

தவறுகளை நாம் ஏன் சரிசெய்வதில்லை. இந்தப் போட்டியில் டிஆர்எஸ் இல்லாதது ஏன்? மூன்று மாதங்களுக்கு முன்பு ஏலம் நடைபெறாதது ஏன்? வெளிநாட்டு வீரர்கள் எத்தனை ஆட்டங்களில் விளையாடுவார்கள் என்பது தெரிவதில்லை. சீருடை தயாராகவில்லை என்கிற செய்தியைப் பார்த்தேன். இது குழப்பமான சூழல். எங்களுடைய உள்ளூர் போட்டியான டிபிஎல் சரியான முறையில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் பிபிஎல் போட்டிக்கான சந்தை இல்லை. காரணம் அதற்கான சந்தையை நாம் உருவாக்கவில்லை. வங்கதேசத்தில் கிரிக்கெட் தான் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டு. கிராமங்களில் கூட விளையாடுகிறார்கள். பிபிஎல் போட்டியைச் சந்தைப்படுத்துவதில் பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் பிபிஎல் போட்டி ஒளிபரப்பானாலும் யாரும் அதைப் பார்ப்பதில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com