அடிப்படை உரிமை என்பது அரசியல் அல்ல: ரஷித் கானுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

அடிப்படை உரிமை என்பது அரசியல் அல்ல: ரஷித் கானுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை விளையாடுவதில் நம்பிக்கையுடன் உள்ளோம்.

அடிப்படை உரிமை என்பது அரசியல் அல்ல என்று பிரபல வீரர் ரஷித் கானுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி பதில் அளித்துள்ளார்.

மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியாவும் ஆப்கானிஸ்தானும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவிருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நேற்று அறிவித்தது. 

இதையடுத்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தான் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் பிரபல வீரர் ரஷித் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: மார்ச் மாதம் விளையாடவிருந்த தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணி விலகியிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.  உலக அளவில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் இந்த முடிவு எங்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது அவ்வளவு சங்கடத்தை அளிப்பதாக இருந்தால் பிபிஎல் போட்டியில் நான் விளையாடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் சங்கடத்தையும் நான் விரும்பவில்லை. எனவே வருங்காலத்தில் பிபிஎல் போட்டியில் நான் விளையாடுவது குறித்து யோசிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தன்னுடைய ட்வீட்டில், கிரிக்கெட் தான் எங்கள் நாட்டின் ஒரே நம்பிக்கையாக உள்ளது. அரசியலைத் தள்ளி வையுங்கள் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ரஷித் கானின் குற்றச்சாட்டுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

மோசமான சூழல் நிலவுவது நன்குத் தெரிகிறது. நாங்கள் சாதாரணமாக இந்த முடிவை எடுக்கவில்லை. எங்கள் அரசு உள்பட பலரிடமும் ஆலோசனை செய்த பிறகே இம்முடிவை எடுத்தோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை விளையாடுவதில் நம்பிக்கையுடன் உள்ளோம். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். ஆனால் கடந்த நவம்பர், டிசம்பரில் தலிபான் அரசு பிறப்பித்த உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் அடிப்படை உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஒருநாள் தொடரிலிருந்து விலகினோம். அடிப்படை மனித உரிமை என்பது அரசியல் அல்ல என்று கூறியுள்ளார். 

2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்குக் கடந்த டிசம்பர் மாதம் தலிபான் அரசு தடைவிதித்தது. பிறகு தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com