மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி

அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 
மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பை: இந்திய அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி

மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடித்தது இந்திய மகளிர் அணி. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றாலும் இலங்கைக்கு எதிராக வெற்றி பெற்று அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா. 

தென்னாப்பிரிக்காவின் பாட்சஸ்ட்ரோமில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து மகளிர் யு-19 அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது. ஜார்ஜியா அதிகபட்சமாக 35 ரன்கள் எடுத்தார். முதல் 7 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததால் நியூசிலாந்து அணியால் விரைவாக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. பர்ஷவி சோப்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது இந்திய மகளிர் அணி. தொடக்க வீராங்கனை ஸ்வேதா ஷெராவத் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷஃபாலி வர்மா 10, செளம்யா 22 ரன்கள் எடுத்தார்கள். சிறப்பாகப் பந்துவீசிய பர்ஷவி சோப்ரா ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வானார்.

முதல்முறையாக நடைபெறும் மகளிர் யு-19 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி. 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 

இறுதிச்சுற்று ஆட்டம் பாட்சஸ்ட்ரோமில் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com