ஓய்வு முடிவை கண்ணீருடன் அறிவித்த தமிம் இக்பால்; உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு பின்னடைவு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று (ஜூலை 6) தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
படம் | ட்விட்டர்
படம் | ட்விட்டர்
Published on
Updated on
1 min read

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று (ஜூலை 6) தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் முதல் தொடங்க உள்ள நிலையில், வங்கதேச வீரர் தமிம் இக்பாலின் இந்த ஓய்வு முடிவு அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

வங்கதேச அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேசம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம்  தோல்வியடைந்தது. இந்த நிலையில், இன்று வங்கதேச ஒரு நாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தமிம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிம் இக்பால் உணர்ச்சிவசப்பட்டு பேசியதாவது: இது எனக்கான முடிவு. நான் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். நான் சிறப்பாக விளையாட முயற்சித்திருக்கிறேன். இந்த தருணத்தில் நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய இந்த பயணத்தில் இணைந்து பயணித்த அனைவருக்கும் நன்றி. அவர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். எனது ரசிகர்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அன்பு மற்றும் நம்பிக்கை என்னை வங்கதேசத்துக்காக சிறப்பாக விளையாடச் செய்தது. வாழ்க்கையில் எனது அடுத்த அத்தியாயத்துக்காக நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களது வேண்டுதலில் நானும் இருப்பேன் என்றார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தமிம் இக்பால் வங்கதேசத்துக்காக 70 டெஸ்ட் போட்டிகள், 241 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 15 ஆயிரம் ரன்களுக்கும் அதிகமாக குவித்துள்ளார். அவர் 25 சதங்கள் மற்றும் 94 அரைசதங்கள் அடித்துள்ளார்.

தமிம் இக்பால்  கடந்த ஆண்டு டி20  போட்டிகளில் இருந்தும், கடந்த ஏப்ரலில் அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். 

வங்கதேச ஒரு நாள் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளதால், அடுத்து வங்கதேச அணியை  ஒரு நாள் போட்டிகளில் யார் வழிநடத்துவது என்பதை வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com