டபிள்யுபிஎல்: அதிரடி ஆட்டத்தால் சாதனைகள் படைத்த கிரேஸ் ஹாரிஸ்!

டபிள்யுபிஎல் போட்டியின் முதல் பரபரப்பான ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு குஜராத் - உ.பி. வாரியஸ் அணிகளுக்கு இடையிலான...
டபிள்யுபிஎல்: அதிரடி ஆட்டத்தால் சாதனைகள் படைத்த கிரேஸ் ஹாரிஸ்!

டபிள்யுபிஎல் போட்டியின் முதல் பரபரப்பான ஆட்டத்தைக் காணும் வாய்ப்பு குஜராத் - உ.பி. வாரியஸ் அணிகளுக்கு இடையிலான மோதலின்போது ரசிகர்களுக்குக் கிடைத்தது.

மும்பையில் நடைபெற்ற டபிள்யுபிஎல் போட்டியின் 3-வது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். 

உ.பி. வாரியர்ஸ் அணி இலக்கை விரட்டியபோது தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 63 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 3 விக்கெட்டுகளே இருந்தன. இதனால் குஜராத்தின் வெற்றியே அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவின் கிரேஸ் ஹாரிஸ் வேறொரு திட்டம் வைத்திருந்தார். 17-வது ஓவரில் 10 ரன்களும் 18-வது ஓவரில் 20 ரன்களும் எடுத்து அசத்தினார்கள் கிரேஸ் ஹாரிஸும் சோஃபி எக்லஸ்டோனும். அடுத்த ஓவரில் மேலும் 14 ரன்கள். இதனால் கடைசி ஓவரில் உ.பி. வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்திலேயே சிக்ஸர். பிறகு மேலும் இரு பவுண்டரிகள். இதனால் 25 பந்துகளில் அரை சதமெடுத்தார் கிரேஸ் ஹாரிஸ். அந்த ஓவரில் 5 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அட்டகாசமான வெற்றியை அடைந்தது உ.பி. வாரியர்ஸ் அணி. கிரேஸ் ஹாரிஸ் 59, எக்லஸ்டோன் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் மறக்க முடியாத வெற்றியை அளித்தார்கள். டபிள்யுபிஎல் போட்டியின் முதல் பரபரப்பான ஆட்டம் என்கிற பெருமையை இந்த ஆட்டம் பெற்றது. 

கிரேஸ் ஹாரிஸின் அதிரடி ஆட்டத்தால் புதிய சாதனையைப் படைத்துள்ளது உ.பி. வாரியர்ஸ் அணி. முக்கியமான மகளிர் டி20 லீக் போட்டிகளில் இதுவரை எந்த அணியும் கடைசி 4 ஓவர்களில் 63 ரன்கள் என்கிற இலக்கை வெற்றிகரமாக விரட்டியதில்லை. இதற்கு முன்பு, 2022-23 டபிள்யுபிபிஎல் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி, பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிராக 61 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் கிரேஸுக்கு உறுதுணையாக இருந்த எக்லஸ்டோன், அந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்திருந்தார். 

மேலும் மகளிர் டி20 லீக் போட்டிகளில் இதுவரை எந்த அணியும் கடைசி 3 ஓவர்களில் 50-க்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமாக விரட்டியதில்லை. உ.பி. வாரியர்ஸ் அணியின் வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com