ஷமியின் அபார பந்துவீச்சால் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி!

ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 
ஷமியின் அபார பந்துவீச்சால் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்த ஆஸ்திரேலிய அணி!

மும்பையில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஷமியின் அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. ஆமதாபாத்தில் நடைபெற்ற கடைசி டெஸ் டிரா ஆனது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. மும்பையில் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெறுகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பாண்டியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஜடேஜா, குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சாளர்களாகத் தேர்வாகியுள்ளார்கள். ஷமி, சிராஜ், ஷர்துல் தாக்குர், பாண்டியா ஆகிய பந்துவீச்சாளர்களும் இஷான் கிஷன், ஷுப்மன் கில், கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் ஆகிய பேட்டர்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆஸி. அணியில் அலெக்ஸ் கேரிக்குப் பதிலாக ஜோஷ் இங்க்லிஷ் இடம்பெற்றுள்ளார். காயத்திலிருந்து குணமாகாத டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. 

ஆஸி. அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டை 5 ரன்களில் போல்ட் செய்தார் சிராஜ். பிறகு மிட்செல் மார்ஷும் கேப்டன் ஸ்மித்தும் நல்ல கூட்டணி அமைத்தார்கள். ஸ்மித், 22 ரன்களில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். 51 பந்துகளில் அரை சதமெடுத்த மிட்செல் மார்ஷ், அதன்பிறகு அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடித்தார். 65 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்த மார்ஷ், மற்றொரு சிக்ஸர் அடிக்க முயன்று ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த விக்கெட். 

மிட்செல் மார்ஷைத் தவிர இதர பேட்டர்கள் நீண்ட நேரம் நிலைக்காமல் வெளியேறினார்கள். லபுஷேன் 15, இங்க்லிஷ் 26, கிரீன் 12, ஸ்டாய்னிஸ் 5, மேக்ஸ்வெல் 8 என முக்கியமான பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸி. அணி மிகவும் தடுமாறியது. 169 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து கெளரவமான நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியைத் திடீரென நிலைகுலையச் செய்தார் ஷமி. இங்க்லிஷ், கிரீன், ஸ்டாய்னிஸ் ஆகியோரை அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றினார். இந்தப் பாதிப்புக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியால் மீண்டும் தலை நிமிர முடியாமல் போனது. கடைசியில் 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com