

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (செப்டம்பர் 24) இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 399 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்தார். ஷுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 72 ரன்களும், கே.எல்.ராகுல் 52 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: பாபர் அசாமால் உலகக் கோப்பை களைகட்டப் போகிறது: கௌதம் கம்பீர்
இதனையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக மேத்யூ ஷார்ட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதன்பின் டேவிட் வார்னர் மற்றும் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சீராக அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
இடையே மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் ஓவர்கள் 33 ஆக குறைக்கப்பட்டு இலக்கும் அதற்கேற்ப குறைக்கப்பட்டது. லபுஷேன் 27 ரன்களில் அஸ்வின் பந்தில் போல்டானார். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஆஸ்திரேலிய அணி 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் களமிறங்கியவர்களில் ஜோஷ் இங்லிஷ் (6 ரன்கள்), அலெக்ஸ் கேரி (14 ரன்கள்), கேமரூன் கிரீன் (19 ரன்கள்), ஆடம் ஸாம்பா (5 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் அதிரடியாக விளையாடிய சீன் அப்பாட் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள்: சாதனைத் துளிகள்!
இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது ஷமி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.