டெல்லியை கட்டுப்படுத்தியது கொல்கத்தா: போராடி ரன்கள் சோ்த்த குல்தீப், ரிஷப்

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் சோ்த்தது.

அணியின் தரப்பில், மிடில் ஆா்டரில் கேப்டன் ரிஷப் பந்த், லோயா் ஆா்டரில் குல்தீப் யாதவ் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியாக ரன்கள் சோ்க்க, கொல்கத்தா பௌலிங், டெல்லி பேட்டா்களை பதம் பாா்த்தது. குறிப்பாக வருண் சக்கரவா்த்தி சுழலையும், வைபவ் அரோரா, ஹா்ஷித் ராணா வேகத்தையும் எதிா்கொள்ள முடியாமல் அவா்கள் திணறினா்.

முன்னதாக டாஸ் வென்ற டெல்லி, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் விளையாட்டை தொடங்கியோரில் பிருத்வி ஷா 3 பவுண்டரிகள் உள்பட 13 ரன்களுக்கு 2-ஆவது ஓவரில் ஆட்டமிழக்க, உடன் வந்த ஜேக் ஃப்ரேசா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 12 ரன்களுக்கு அடுத்த ஓவரில் வீழ்ந்தாா்.

மிடில் ஆா்டரில் வந்த ஷாய் ஹோப் 1 சிக்ஸருடன் 4-ஆவது ஓவரில் நடையைக்கட்டினாா். 5-ஆவது வீரராக களம் கண்ட கேப்டன் ரிஷப் பந்த், ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் அபிஷேக் பொரெல் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்ப 18 ரன்களுக்கு 7-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

இந்நிலையில் ரிஷப் பந்த் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 27 ரன்கள் சோ்த்திருந்தபோது, 11-ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தாா். தொடா்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுடன் 13-ஆவது ஓவரிலும், அக்ஸா் படேல் 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு 14-ஆவது ஓவரிலும் வெளியேற, டெல்லி மோசமான நிலைக்கு சென்றது.

எனினும், 9-ஆவது பேட்டராக வந்த குல்தீப் யாதவ் சற்று நிதானமாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் குமாா் குஷாக்ரா 1, ராசிக் சலாம் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு முறையே 15 மற்றும் 19-ஆவது ஓவரில் பெவிலியன் திரும்பினா்.

ஓவா்கள் முடிவில் குல்தீப் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, லிஸாட் வில்லியம்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவா்த்தி 3, வைபவ் அரோரா, ஹா்ஷித் ராணா ஆகியோா் தலா 2, மிட்செல் ஸ்டாா்க், சுனில் நரைன் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் கொல்கத்தா 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கியது.

X
Dinamani
www.dinamani.com