39 வயதாகும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 1200க்கும் அதிகமான போட்டிகளில் பங்கேற்று 33 சீனியர் கோப்பைகளை வென்றுள்ளார்.
ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது 2022-லும் நிறைவேறவில்லை. ஆனாலும் அவரது ஆதிக்கம் கால்பந்தாட்ட வரலாற்றில் கூடிக்கொண்டே செல்கிறது.
போர்ச்சுகல் அணிக்காக 130 கோல்களும் ஒட்டுமொத்தமாக 899 கோல்களையும் ரொனால்டோ அடித்துள்ளார். விரைவில் 900 கோல்களை அடிக்கவிருக்கிறார். அநேகமாக இந்த வாரத்திலேயே இந்த சாதனை நிகழ வாய்ப்பிருக்கிறது.
இது குறித்து யூடியூப் சேனலில் கேள்வி கேட்கப்பட்டபோது ரொனால்டோ, “முதலில் நான் 900 கோல்களை அடிக்க வேண்டும். அடுத்து 1,000 கோல்கள் அடிப்பதை இலக்காக கொள்வேன். ஆனால் ஒரேயொரு வித்தியாசம் எனது ஒவ்வொரு கோல்களுக்கும் விடியோ இருக்கிறது. அதனால் அதை என்னால் நிரூபிக்க முடியும்” என்றார்.
அதற்கு உடன் பேசிய பெர்டினாட், “நீங்கள் மிகவும் குறும்புத்தனமானவர். நீங்கள் பீலேவை சொல்கிறீர்களா?” எனக் கேட்பார்.
அதற்கு ரொனால்டோ, “ கவனிக்கவும், நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய கோல்களுக்கு ஆதாரமாக விடியோ பதிவு இருக்கும்” என்றார்.
கால் பந்து வரலாற்றில் ஃபிபா கூற்றின்படி பீலே 1,281 கோல்கள் அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதில் பல நூறு கோல்கள் நட்பு ரீதியான போட்டிகளில் வந்ததாகவும் கூறப்படுகின்றன. இதை கிண்டல் செய்யவே ரொனால்டோ அவ்வாறு கூறியுள்ளார்.
லியோனல் மெஸ்ஸி 838 கோல்களுடன் இருக்கிறார். ரொனால்டோ 899 கோல்களுடன் முன்னிலையில் இருக்கிறார்.
சமீபத்தில் யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது.