மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

மேற்கிந்தியத் தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது.
சதமடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல்
சதமடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல்

மேற்கிந்தியத் தீவுகளை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 22 ரன்களிலும், ஜோஷ் இங்லிஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடினர். இருப்பினும், மார்ஷ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டொய்னிஸ் 16 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல்லுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். தனது அதிரடியான பேட்டிங்கால் மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளர்களை மேக்ஸ்வெல் திணறடித்தார். பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடிக்கடி பறந்தன. ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல் சதம் விளாசி அசத்தினார். அவர் 55 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 8  சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய டிம் டேவிட் அவரது பங்குக்கு 14 பந்துகளில் 31  ரன்கள் குவித்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அல்சாரி ஜோசப் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்டு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

242  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பௌவல் 63 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து ஆண்ட்ரே ரசல் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலியா தரப்பில் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3  விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் பெஹ்ரண்டிராஃப் மற்றும் ஆடம் ஸாம்பா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com