
ஊழல் குற்றச்சாட்டில் வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டாண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் எதிர்ப்பு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டை நாசிர் ஹுசைன் ஒப்புக்கொண்டதையடுத்து, சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2 ஆண்டுகளுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கும் அவருக்கு தடை விதித்துள்ளது.
இதையும் படிக்க | தைவான் விஷயத்தில் தலையிட வேண்டாம்: பிலிப்பைன்ஸுக்கு சீனா கண்டனம்!
2023 செப்டம்பரில் அவர் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி, புதிய ஐபோன் 12-ஐ அன்பளிப்பாக வாங்கிய குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது. அதுகுறித்த உரிய விவரங்களை ஊழல் தடுப்பு அதிகாரியிடம் அவர் தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் ஊழல் தடுப்பு அதிகாரியின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததுடன், அதிகாரி கோரிய எந்த தகவல்களையும் முழுமையாகவும், துல்லியமாகவும் வழங்கவில்லை.
அதனைத் தொடர்ந்து தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நாசிர் ஹுசைன் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி-யின் நிபந்தனைகளை அவர் நிறைவேற்றும்பட்சத்தில் 2025 ஏப்ரல் 7-ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அவர் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசிர் ஹுசைன் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக 19 டெஸ்ட், 65 ஒருநாள் மற்றும் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.