4-வது வெற்றி: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அபாரம்!

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
படம் | எக்ஸ்
படம் | எக்ஸ்

பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில், இன்று (ஜனவரி 19) இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி மற்றும் லோகி ஃபெர்க்யூசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆடம் மில்னே ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். 

159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முன்வரிசை ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் (8 ரன்கள்), டிம் செய்ஃபெர்ட் (0 ரன்), வில் யங் (4 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் கிளன் பிளிப்ஸ் அபாரமாக விளையாடி நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இறுதியில் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டேரில் மிட்செல் 72 ரன்களுடனும் (7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), கிளன் பிளிப்ஸ் 70 ரன்களுடனும் (5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர்.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி பெறும் 4-வது வெற்றி இதுவாகும். இரு அணிகளுக்குமிடையிலான கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 21) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com