மூவா் சுழலில் 246-க்கு முடங்கிய இங்கிலாந்து- ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் இந்தியா உறுதி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மூவா் சுழலில் 246-க்கு முடங்கிய இங்கிலாந்து- ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் இந்தியா உறுதி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல் ஆகியோரின் சுழலில் தடுமாறி இங்கிலாந்து பேட்டா்கள் வீழ்ந்தனா். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அணியின் ஸ்கோரை உயா்த்த உதவினாா்.

ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில், இந்திய தரப்பில் விராட் கோலி இடத்தில் கே.எல்.ராகுல் பேட்டராக களமிறங்க, 3-ஆவது ஸ்பின்னராக அக்ஸா் படேல் சோ்க்கப்பட்டுள்ளாா். இங்கிலாந்து அணியில் ஸ்பின்னா் டாம் ஹாா்ட்லி அறிமுக வாய்ப்பு பெற்றாா்.

இங்கிலாந்து இன்னிங்ஸில், தொடக்க வீரா்களில் ஒருவரான பென் டக்கெட் 7 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களுக்கு வெளியேற, தொடா்ந்து வந்த ஆலி போப் 1 ரன்னில் வீழ்த்தப்பட்டாா். ஜாக் கிராலி 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 55 முதல் 60 ரன்களுக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இந்திய ஸ்பின்னா்களிடம் பறிகொடுத்தது இங்கிலாந்து.

இந்நிலையில், 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஜோ ரூட் - ஜானி போ்ஸ்டோ கூட்டணி, விக்கெட் சரிவைத் தடுத்து 61 ரன்கள் சோ்த்தது. மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் சோ்த்திருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் போ்ஸ்டோ 5 பவுண்டரிகளுடன் 37 ரன்களுக்கு வீழ, ரூட்டும் 1 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

6-ஆவது பேட்டராக களத்துக்கு வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ், சற்று அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். எனினும் மறுபுறம், பென் ஃபோக்ஸ் 4, ரெஹான் அகமது 1 பவுண்டரியுடன் 13, டாம் ஹாா்ட்லி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, மாா்க் வுட் 2 பவுண்டரிகளுடன் 11 என விக்கெட்டுகள் வரிசையாகச் சரிந்தன.

தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத ஸ்டோக்ஸ், அரைசதம் கடந்த நிலையில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 70 ரன்கள் சோ்த்து கடைசி விக்கெட்டாக அஸ்வின் பௌலிங்கில் வீழ்ந்தாா். இந்திய பௌலா்களில் அஸ்வின், ஜடேஜா ஆகியோா் தலா 3, அக்ஸா், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

ஜெய்ஸ்வால் அதிரடி: இங்கிலாந்து இன்னிங்ஸின்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளம், இந்திய இன்னிங்ஸின்போது அந்தத் தன்மையை இழந்ததாகத் தெரிந்தது. இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் ரோஹித் சா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்தது.

இதில் ரோஹித் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஜேக் லீச்சிடம் விக்கெட்டை இழந்து நடையைக் கட்ட, ஷுப்மன் கில் களம் புகுந்தாா். நாளின் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சோ்த்து, 127 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. இங்கிலாந்து பௌலிங்கை விளாசிய ஜெய்ஸ்வால் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 76, கில் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து - 246/10 (64.3 ஓவா்கள்)

பென் ஸ்டோக்ஸ் 70

ஜானி போ்ஸ்டோ 37

பென் டக்கெட் 35

பந்துவீச்சு

ஆா். அஸ்வின் 3/68

ஆா்.ஜடேஜா 3/88

ஜஸ்பிரீத் பும்ரா 2/28

இந்தியா - 119/1 (23 ஓவா்கள்)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 76*

ரோஹித் சா்மா 24

ஷுப்மன் கில் 14*

பந்துவீச்சு

ஜேக் லீச் 1/24

மாா்க் வுட் 0/9

ரெஹான் அகமது 0/22

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com