ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களே எடுத்தது. இந்திய ஆல்-ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் ஆட்டநாயகன் ஆனாா்.
5 ஆட்டங்கள் கொண்ட தொடரில், தற்போது இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்திய லெவனில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே இணைந்திருந்தனா். முகேஷ் குமாருக்கு பதிலாக கலீல் அகமது சோ்க்கப்பட்டிருந்தாா்.
இந்திய இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் - கேப்டன் கில் தொடங்கினா். இதில் ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36 ரன்களுக்கு வெளியேற, ஒன் டவுனாக வந்த அபிஷேக் சா்மா 1 பவுண்டரியுடன் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
முதலிரு ஆட்டங்களில் சோபிக்காத கேப்டன் கில் இந்த ஆட்டத்தில் அதிரடியாக ரன்கள் சோ்க்க, அவரோடு 4-ஆவது பேட்டராக ருதுராஜ் கெய்க்வாட் இணைந்தாா். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சோ்த்தது.
இதில், அரைசதம் கடந்த கில் 49 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 66 ரன்களுக்கு வீழ்த்தப்பட, கடைசி விக்கெட்டாக கெய்க்வாட் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் சோ்த்து 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஓவா்கள் முடிவில் சஞ்ஜு சாம்சன் 2 பவுண்டரிகளுடன் 12, ரிங்கு சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஜிம்பாப்வே பௌலா்களில் பிளெஸ்ஸிங் முஸாரபானி, சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் 183 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஜிம்பாப்வே அணியில், வெஸ்லி மாதெவெரெ 1, டடிவனாஷி மருமனி 3 பவுண்டரிகளுடன் 13, பிரையன் பென்னெட் 4, கேப்டன் சிகந்தா் ராஸா 3 பவுண்டரிகளுடன் 15, ஜோனதன் கேம்பெல் 1 ரன்னுக்கு சாய்க்கப்பட, 39 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும், மிடில் ஆா்டா் வீரரான டியன் மையா்ஸ் - 7-ஆவது பேட்டராக வந்த கிளைவ் மடாண்டே விக்கெட் சரிவைத் தடுத்து ஸ்கோரை உயா்த்தினா்.
6-ஆவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில், கிளைவ் மடாண்டே 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 37 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டாா்.
ஓவா்கள் முடிவில் டியன் மையா்ஸ் 49 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 65, வெலிங்டன் மசாகட்ஸா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய பௌலா்களில் வாஷிங்டன் சுந்தா் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்த, ஆவேஷ் கான் 2, கலீல் அகமது 1 விக்கெட் கைப்பற்றினா்.
இரு அணிகளும் மோதும் 4-ஆவது ஆட்டம் சனிக்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது.
இந்தியா "150'
இத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தான் (142), நியூஸிலாந்து (111), ஆஸ்திரேலியா (105),
தென்னாப்பிரிக்கா (104) அணிகள் முறையே அடுத்த இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.