
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு போதுமான அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டதாக அந்த அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரிலும், அண்மையில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி மிகவும் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
50 ஓவர் உலகக் கோப்பையின்போது பாபர் அசாமின் தலைமைப் பண்பு (கேப்டன்சி) கடுமையான விமர்சத்துக்கு உள்ளாகி அவர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அதன்பின், டி20 உலகக் கோப்பைத் தொடருக்காக அவர் அணியின் கேப்டனாக மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். ஆனால், டி20 உலகக் கோப்பையிலும் பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாத நிலையில், மீண்டுமொருமுறை பாபர் அசாமின் கேப்டன்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு போதுமான அளவுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுவிட்டதாகவும், அவர் கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அந்த அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்துவதற்கான முழு வாய்ப்பு பாபர் அசாமுக்கு வழங்கப்பட்டது. கேப்டனாக அவரது திறமையை நிரூபிப்பதற்கு போதுமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுவிட்டன. அவர் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்ற முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பாகிஸ்தான் அணியை கேப்டனாக நான் வழிநடத்தியுள்ளேன். யூனிஸ் கான் மற்றும் மிஸ்பா உல் ஹக் ஆகியோரும் பாகிஸ்தான் அணியை கேப்டனாக வழிநடத்தியிக்கிறார்கள். உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக செயல்பட்டால், முதல் விமர்சனம் அணியின் கேப்டன் மீதுதான் எழும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.