இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகும் கௌதம் கம்பீர்?
இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ-ன் கிரிக்கெட் ஆலோசனைக் குழு இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக இன்று (ஜூன் 18) நேர்காணல் செய்துள்ளது. ஜூம் கால் வாயிலாக நடைபெற்ற இந்த நேர்காணலில் கௌதம் கம்பீர் மற்றும் கிரிக்கெட் ஆலோசனைக் குழுத் தலைவர் அசோக் மல்கோத்ரா கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலில் இன்று பங்கேற்றார். முதல் கட்ட கலந்தாலோசனை நிறைவடைந்துள்ளது. நாளை அடுத்தக்கட்ட கலந்தாலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணலில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வரவிருக்கும் ஐசிசி தொடர்களுக்காக இந்திய அணிக்காக என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என கௌதம் கம்பீரிடம் கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. கௌதம் கம்பீரே இந்திய அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் எனக் கூறப்படுகிறது. அவரது பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவது மட்டுமே மீதமுள்ளது எனக் கூறப்படுவதோடு, அடுத்த 48 மணி நேரத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
42 வயதாகும் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு அந்த அணிக்கு கோப்பையை வென்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.