
ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் மற்றும் இலங்கை வீரர் பதும் நிசங்கா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை அவர் 655 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் அவர் இரட்டை சதம் விளாசி அசத்தினார். ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டிக்கு முதல் முறையாக ஜெய்ஸ்வால் தேர்வாகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்தார். அவரது சிறப்பான பங்களிப்பால் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையிலும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அண்மையில் ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் பதும் நிசங்கா இரட்டை சதம் விளாசி அசத்தினார். அதே தொடரில் மீண்டும் அவர் சதம் விளாசினார். அந்தத் தொடரில் நிசங்கா 346 ரன்கள் எடுத்தார். நிசங்காவும் முதல் முறையாக சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தேர்வாகியுள்ளார்.
இவர்கள் மூவரில் பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.