முதன்முறையாக பட்டம் வெல்லும்
முனைப்பில் காலிகட்-டில்லி: இன்று இறுதி ஆட்டம்

முதன்முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் காலிகட்-டில்லி: இன்று இறுதி ஆட்டம்

சென்னை: பிரைம் வாலிபால் லீக் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள காலிகட் ஹீரோஸ்-டில்லி டுஃபான்ஸ் அணிகள் வியாழக்கிழமை இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் கடந்த 45 நாள்களாக நடைபெற்று வந்த பிரைம் வாலிபால் லீக் தொடரில் மொத்தம் 8 அணிகள் களம் கண்டன. மொத்தம் 48 ஆட்டங்கள் நடைபெற்றன. லீக் கட்டம் முடிந்த பின்னா் 5 அணிகள் பங்கேற்ற சூப்பா் ஃபைவ்ஸ் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இதன் இறுதி ஆட்டத்துக்கு காலிகட்-டில்லி அணிகள் தகுதி பெற்றுள்ளன.

காலிகட் அணி ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளாக அரையிறுதிவரை முன்னேறியது. தற்போது முதன்முறையாக அறிமுகம் ஆன டில்லி அணி முதல் லீகிலேயே இறுதிக்குள் நுழைந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது. காலிகட்டும் முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இதுதொடா்பாக காலிகட் அணியின் கேப்டன் ஜெரோம் கூறியதாவது:

முதன்முறையாக இறுதிக்குள் நுழைந்தது மகிழ்ச்சி தருகிறது. லீக் கட்டத்தில் சவால் கடுமையாக இருந்தது. கோப்பையை வெல்லும் முனைப்பில் அணி வீரா்கள் உள்ளனா். இதற்கான ஒருங்கிணைப்புடன் செயல்படுவோம்.

டில்லி அணியின் கேப்டன் சக்லைன் கூறியது:

12 புள்ளிகளுடன் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றோம். கடந்த ஒரு மாதத்துக்கு மேல் பரபரப்பான ஆட்டங்களில் மோதினோம். காலிகட் அணியை குறைத்து மதிப்பிடவில்லை. அறிமுகமான முதல் லீகிலேயே பட்டம் வெல்ல வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளோம்.

கிளப் உலக சாம்பியன்ஷிப்:

பிரைம் வாலிபால் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி உலக கிளப் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறும். இன்றைய ஆட்டம்: காலிகட்-டில்லி இடம்: சென்னை நேரம்: மாலை 6.30

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com