
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது ஓய்வு முடிவை இன்று (மே 11) அறிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்த சம்மரில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி எனது கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் இருந்தே எனக்கு பிடித்த விளையாட்டான கிரிக்கெட்டினை எனது நாட்டுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது நம்பமுடியாத விதமாக இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்காக விளையாட முடியாததை கண்டிப்பாக மிஸ் செய்வேன். ஆனால், ஒய்வு பெற்று மற்றவர்களுக்கு வழி விடுவதற்கு இதுவே சரியான தருணம். அதன்மூலம், எனது கனவு நனவானதைப் போன்று அவர்களது கனவுகளும் நனவாகும். டேனியல்லா, லோலா, ரூபி மற்றும் எனது பெற்றோர் அவர்களது அன்பும் ஆதரவும் இன்றி இதனை நான் செய்திருக்க முடியாது. அவர்களுக்கு எனது மிகப் பெரிய நன்றி. இங்கிலாந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகமானார். அவர் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமை அவரையே சேரும். முதல் இரண்டு இடங்களில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவும் உள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஜூலை 10 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.