
ரோஹித் சர்மா 2022ஆம் ஆண்டு பிப்ரவரியிலிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கிறார். ஒருநாள் உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இறுதிப் போட்டி வரைக்கும் சென்ற இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கிறது.
ஐபிஎல் போட்டியில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லாமல் இருக்கிறார்.
இந்நிலையில் துபை ஐ 103.8 பண்பலையின் நேர்காணலில் பங்கேற்றார். அதில் தனக்கு மிகவும் கடினமாக இருந்த பந்துவீச்சாளர் குறித்து பேசியுள்ளார். அதில் ரோஹித் பேசியதாவது:
நான் பேட்டிங் செய்வதற்கு முன்பாக அவரது விடியோவை 100 முறை பார்த்துவிட்டு சென்றாலும் ஆட்டமிழப்பேன். அது யாரென்றால் டேல் ஸ்டெயின்தான். அவர் கிரிக்கெட் போட்டியின் ஒரு லெஜெண்ட் என்பேன். அவரது வாழ்நாளில் கிரிகெட்டில் சாதித்தது எல்லாம் பார்ப்பதற்கு அருமையானது. நான் அவரது ஓவரை பலமுறை ஆடியிருக்கிறேன். மிகவும் வேகமாக வீசுவார். அந்த வேகத்திலும் பந்தினை ஸ்விங் (திருப்புவார்) செய்வார். அது மிகவும் கடினமானது. அவர் ஒரு தீயான போட்டியாளர்.
அனைத்து போட்டியிலும் அனைத்து தொடர்களிலும் வெல்ல வேண்டுமென நினைப்பவர். அவருக்கு எதிராக விளையாடியது நல்ல விஷயம். அவருக்கு எதிராக நான் சரியாக விளையாடியதில்லை என்றாலும் அவருடன் விளையாடியது எனக்கு பிடித்திருந்தது என்றார்.
ஸ்டெயின் தென்னாப்பிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர். 2004ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆரம்பித்த ஸ்டெயின் 2019இல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2021இல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டெயின் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் ஒருமுறை 7 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தியுள்ளார். 2009 முதல் 2014 வரை டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் ஸ்டெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.