டி20 உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் தேர்வுக்குழுத் தலைவர், தலைமைப் பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. முதல்முறையாக இந்தாண்டு 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளன. தற்போது பயிற்சி ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இதில் ஆஸ்திரேலியா நமீபியா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் 9 சர்வதேச ஆஸி. வீரர்கள் மட்டுமே விளையாடினார்கள். மீதமுள்ள 4 பேருக்கு பதிலாக ஆஸியின் தேர்வுக்குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி, தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக் டொனால்ட் மற்றும் 2 உதவி பயிற்சியாளர்களும் ஃபீல்டிங் செய்தனர்.
முதலில் விளையாடிய நமீபியா 119 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஜான் கிரீன் 38 ரன்கள் எடுத்தார். ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகள், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்து ஆடிய ஆஸி. 10 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்து வென்றது. வார்னர் 54*, மிட்செல் மார்ஷ் 18, டிம் டேவிட் 23, வேட் 12 ரன்களும் எடுத்தார்கள்.
இரண்டு மாதம் ஐபிஎல் போட்டி விளையாடியுள்ளதால் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இவர்களுக்கு பதிலாக தேர்வுக்குழுத் தலைவர், தலைமைப் பயிற்சியாளர் ஃபீல்டிங் செய்தார்கள். இந்த நிகழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.