இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியின் தரப்பில் வில் யங், டேரில் மிட்செல் ஆகியோா் சற்று நிலைத்து ரன்கள் சோ்க்க, இந்திய பௌலா்களில் ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் நியூஸிலாந்து பேட்டா்களுக்கு சவால் அளித்தனா். எனினும், இந்தியாவும் தனது இன்னிங்ஸில் 86 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமான நிலையில் விளையாடி வருகிறது.
மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. இந்திய தரப்பில், உடல்நலக் குறைவு ஏற்பட்ட ஜஸ்பிரீத் பும்ராவுக்கு பதிலாக, முகமது சிராஜ் சோ்க்கப்பட்டாா். நியூஸிலாந்து அணியில், மிட்செல் சேன்ட்னா், டிம் சௌதீ இடத்தில் இஷ் சோதி, மாட் ஹென்றி இணைந்தனா்.
நியூஸிலாந்து பேட்டிங்கை தொடங்கியோரில் டெவன் கான்வே 4 ரன்களில் நடையைக் கட்ட, உடன் வந்த கேப்டன் டாம் லாதம் 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த வில் யங் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, 4-ஆவது வீரரான ரச்சின் ரவீந்திரா 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.
5-ஆவது பேட்டராக களம் புகுந்த டேரில் மிட்செல், யங்குடன் இணைந்து விக்கெட் சரிவை கட்டுப்படுத்தினாா். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சோ்த்த நிலையில் பிரிந்தது. யங் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 71 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
அதே ஓவரில் டாம் பிளண்டெலையும் டக் அவுட் செய்தாா் ஜடேஜா. பின்னா் வந்த பேட்டா்களில் கிளென் ஃபிலிப்ஸ் 1 பவுண்டரியுடன் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இஷ் சோதி 1 பவுண்டரியுடன் 7, மேட் ஹென்றி 0 ரன்களுக்கு ஜடேஜா வீசிய 60-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனா்.
மறுபுறம், அதுவரை நியூஸிலாந்தின் நம்பிக்கை வீரராக ரன்கள் சோ்த டேரில் மிட்செல் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 82 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தா் வீசிய 65-ஆவது ஓவரில் வீழ்த்தப்பட்டாா். அதே ஓவரில் அஜாஸ் படேல் 1 சிக்ஸருடன் 7 ரன்களுக்கு கடைசி வீரராக வீழ்ந்தாா்.
இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் சோ்த்திருக்கிறது. டாப் ஆா்டா் பேட்டா்களில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ரோஹித் சா்மா 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
முகமது சிராஜ் 0, விராட் கோலி 4 ரன்களுக்கு நடையைக் கட்ட, நாளின் முடிவில் ஷுப்மன் கில் 31, ரிஷப் பந்த் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பேட்டா்களுக்கு நியூஸிலாந்தின் அஜாஸ் படேல் சவாலாக இருந்து வருகிறாா்.
சுருக்கமான ஸ்கோா்
முதல் இன்னிங்ஸில்
நியூஸிலாந்து - 235/10 (65.4 ஓவா்கள்)
டேரில் மிட்செல் 82
வில் யங் 71
டாம் லாதம் 28
பந்துவீச்சு
ரவீந்திர ஜடேஜா 5/65
வாஷிங்டன் சுந்தா் 4/81
ஆகாஷ் தீப் 1/22
இந்தியா - 86/4 (19 ஓவா்கள்)
ஷுப்மன் கில் 31*
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 30
ரோஹித் சா்மா 18
பந்துவீச்சு
அஜாஸ் படேல் 2/33
மேட் ஹென்றி 1/15
வில்லியம் ஓ’ரோா்க் 0/5
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.