சாம்பியன் ரியல் மாட்ரிட் அணியை வென்ற லிவர்பூல் அணியை இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் பாராட்டி பேசியுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நடத்தும் யுஇஎப்ஏ சாம்பியன் லீக்கில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியை லிவர்பூல் அணி வீழ்த்தி அடுத்து சுற்றுக்கு தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.
முதல் பாதியில் இரு அணிகளும் எவ்வளவு முயன்றும் ஸ்கோர் செய்ய முடியவில்லை. இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி சார்பாக அலெசிஸ் மாக் அலிஸ்டர் 52ஆவது நிமிஷத்திலும் காக்போ 76ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.
ஐரோப்பாவின் சிறந்த அணி லிவர்பூல்
இது குறித்து மான்செஸ்டர் யுனைடெட், இங்கிலாந்தின் டிஃபென்டர் ரியோ பெர்டினான்ட் பேசியதாவது:
ஐரோப்பியாவிலுள்ள அனைத்து அணிகளுடனும் லிவர்பூல் சவாலுடன் எதிர்கொண்டு விளையாடினார்கள். தற்போது ஐரோப்பியாவிலேயே மிகச் சிறந்த அணியாக இருக்கிறது. லிவர்பூல் ஒரு அணியாக விளையாடினார்கள்.
தனித்தனியாக ஒவ்வொருவரும் பசியுடன் இருப்பதுபோல் விளையாடினார்கள். சாதரண முடிவுக்காக மட்டும் விளையாடவில்லை, மிகுந்த தாகத்தில் விளையாடினார்கள்.
ஆடுகளத்தில் ராட்வீலர் நாய்கள்போல பசியுடன் விளையாடினார்கள். பல நாள்களாக உணவில்லாமல் இருந்து வேட்டையாட அனுப்பியதுபோல லிவர்பூல் அணியினர் விளையாடினார்கள்.
வேட்டை நாய்களாக வீரர்கள்
லிவர்பூல் அணியினரிடம் அமைதி இருந்தது. முகமது சாலா மாதிரியான உள்ளுணர்வு மிக்க வீரர் இருக்கும்போது எல்லாமே சிறப்பாக நடக்கும். அனைவருமே நன்றாக விளையாடினார்கள்.
லிவர்பூல் தலைமைப் பயிற்சியாளர் குறித்து நான் போட்டிக்கு முன்பாக கூறியதுக்கு சரியான பதில் தந்துள்ளார். நடப்பு சாம்பியன் லீக் வெற்றியாளரை இந்தளவுக்கு (2-0) வென்ற விதம் பிடித்தது என்றார்.
லிவர்பூல் அணி 5 போட்டிகளில் 5 வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இதன்மூலம் லிவர்பூல் அணி அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.