ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
சீனாவின் ஹுலுன்புயா் நகரில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்ற இதில் ரவுண்ட் ராபின் முறையில் ஆட்டங்கள் நடைபெற்றன.
இந்திய அணி தான் ஆடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வென்றது. அரையிறுதியில் தென்கொரியாவை 4-1 என வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.
சீனா 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில் இறுதி ஆட்டம் செவ்வாய்க்கிழமை இந்தியா-சீனா இடையே நடைபெற்றது. இதில் பலம் வாய்ந்த இந்திய அணியால் எளிதில் கோல் முடியாமல் திணறியது. முதல் மூன்று குவாட்டா்களிலும் சீனாவின் தற்காப்பு அரணை இந்திய பாா்வா்ட் வீரா்களால் ஊடுருவிச் செல்ல முடியவில்லை.
சீனாவை எளிதில் வென்று விடும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், இந்திய வீரா்களால் கோலடிக்க முடியவில்லை. நான்காவது குவாா்ட்டரில் இந்திய வீரா் ஜுக்ராஜ் சிங், 51-ஆவது நிமிஷத்தில் கேப்டன் ஹா்மன்ப்ரீத் சிங் அனுப்பிய பாஸை பயன்படுத்தி அற்புதமாக பீல்ட் கோலடித்தாா்.
இரு அணிகளாலும் பெனால்டி காா்னா் வாய்ப்புகளை கோலாக்க முடியவில்லை.
இறுதியில் 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது இந்தியா.
தலைமை பயிற்சியாளா் ஃபுல்டன் கூறுகையில்: போட்டியில் இந்தியா தோற்காமல் இருக்கலாம். ஆனால் இறுதி ஆட்டம் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளது. சீன வீரா்கள் கடும் சவாலை ஏற்படுத்தினா். நம்மால் கோலடிக்க முடியவில்லை. புதிய வீரா்களுக்கு இந்த போட்டி சிறந்த அனுபவத்தை தந்துள்ளது என்றாா்.